குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காட்டுமாறு கேட்ட செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை ஒருமையில் பேசியதுடன் ஆதாரத்தை தராமல் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினார்.
ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திடம், எண்ணூர் அனல் மின்நிலைய திட்ட விரிவாக்கத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை அதை நிரூபிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிஜிஆர் எனர்ஜி நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் மீதான 26 குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு செபிக்கு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து இன்று(ஜனவரி 4) செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைமுறை செய்தியாளர், பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறீர்கள், ஆனால் எந்த ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை நான் தருவேன். ஆனால் அரைமணி நேரம் அதை ஒளிப்பரப்பவேண்டும் என்று சவால் விடுத்தார்.
நீங்கள் திமுகவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு கேள்வி எழுப்பக்கூடாது. முதலமைச்சர் டீ குடித்தார், முதலமைச்சர் பல்டி அடித்தார் என்று அவர் புராணமே பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு நான் வைக்கவில்லை. ஜர்னலிஸ்ட்டாக ஒரு வேலைகூட செய்யாமல் உங்களுக்கும் சேர்ந்து நான் வேலை பார்க்கவேண்டுமா?.
உங்களுக்கு அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என்று கேட்டு போனை காட்டும்படி செய்தியாளரை மிரட்டினார். டிவி சேனல்கள் என்றால் பார்த்து பயப்படவேண்டும் என்று நினைக்கிறீர்களா?.
இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் நானில்லை. என் அறைக்கு வாருங்கள் நான் ஆதாரத்தை தருகிறேன்.
திமுகவினரை கேள்வி கேட்கும் தைரியம் இருக்கிறதா? திமுகவைப் பற்றி நீங்கள் செய்தி போட்டால் உங்கள் சேனல் கடைசிக்கு சென்றுவிடும் என்று ஆவேசமாகப் பேசினார்.
அரை மணி நேரத்தில் ஆதாரம் கொடுக்கிறேன் என்று சொன்ன அண்ணாமலை நீண்ட நேரத்திற்குப் பிறகு புதிய தலைமுறை செய்தியாளரை மட்டும் தனது அறைக்கு அழைத்தார். ஆனால் வேறு எந்த செய்தியாளர்களையும் அனுமதிக்கவில்லை.
உள்ளே சென்ற செய்தியாளர் ஆதாரத்தை வெளியிட்டு நீங்களே பேசுங்கள் என்று சொன்னபோது அண்ணாமலை, ஆனால் நேர்காணலுக்கு நான் வரமாட்டேன், எனக்கு பதிலாக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் பேசுவார் என்று கூறியுள்ளார்.
அதை ஏற்க மறுத்த செய்தியாளர், நீங்கள் தானே நேரடி சவால் விடுத்தீர்கள், நீங்களே ஆதாரத்தை வெளியிட்டு விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் கோபமடைந்த அண்ணாமலை, நீ என்ன பெரிய ஆளா? நீ என்ன பெரிய சேனலா? ஒரு மாநிலத் தலைவரையே விவாதத்திற்கு கூப்பிடுவாயா என்று கோபத்துடன் பேசியுள்ளார்.
இதையடுத்து பாஜக நிர்வாகிகள் புதிய தலைமுறை செய்தியாளரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கின்றனர்.
அண்ணாமலையின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம்.
மாறாக எந்த ஊடகம் என்று கேட்பதுடன், அவர்களின் செய்தி சேகரிக்கும் பணி குறித்து அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல.
இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை, மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
கலை.ரா
பணி நீக்கம்: ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரதம்!
அதென்ன ஓபிஎஸ் ஈபிஎஸ்?: நீதிபதிகள் கேள்வி!