Annamalai surprise meeting with Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு : டெல்லியில் நடப்பது என்ன?

டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி  திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.  இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இந்தசூழலில் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை டெல்லி தலைமை அழைத்தது.

அதன்படி நேற்று (அக்டோபர் 1) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை. ஆனால், நேற்று இரவு டெல்லி பாஜக தலைமை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது.

இதனால் அண்ணாமலையால் நேற்று பாஜக தலைவர்களை சந்திக்க முடியவில்லை. இரவு தேஜஸ்வி சூர்யா எம்.பி வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது தமிழகத்தில் இருந்து தான் எடுத்துச் சென்ற புள்ளி விவரங்கள் அடங்கிய ஃபைலை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறார். தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு எதிரான ஓட்டு வங்கிகளை ஒருங்கிணைத்து சென்றால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்பது தான் அந்த ஃபைலில் இருக்கும் புள்ளி விவரங்கள். இதை கட்சி தலைமையிடம் சொல்லி பாஜக தலைமையில் கூட்டணி அமைப்பது தான் அண்ணாமலையின் நோக்கம்.

ஆனால் ஏறகனவே தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டு ஒரு அறிக்கையை டெல்லி தலைமையிடம் தந்திருக்கிறாராம்.

‘திமுக, அதிமுகவை கடுமையாக எதிர்த்தால் நாளை யார் நம்மை ஆதரிப்பார்கள். இருவரில் யாராவது ஒருவருடன் கூட்டணி அமைத்தால் தான் எம்.பி தேர்தலில் சீட்டை பெற முடியும். அதனால் அதிமுகவுடன் நட்புடன் கூட்டணி அமைத்து செல்வது தான் பலன் தரும்’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் என யாருடைய ஆலோசனையை டெல்லி தலைமை ஏற்றுக்கொள்ளும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இதுவரை அண்ணாமலை பாஜக தலைவர்களான ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை சந்திக்க முடியவில்லை.

5 மாநில தேர்தல் குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருவதால் சந்திக்கமுடியவில்லை என டெல்லி பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

அதேசமயம் பாஜகவின் தேசிய மகளிரணி அணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசனும் டெல்லியில் தங்கியிருக்கிறார்.

பாஜக மாநில செயலாளரான ராம சீனிவாசனும் டெல்லி விரைந்திருக்கிறார்.

இந்நிலையில்,  “தமிழ்நாட்டுக்கான டெல்லி மேலிட பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலை, வானதி சீனிவாசன், ராம சீனிவாசன் மூவரையும் தனி தனியாக சந்தித்து ஆலோசனை செய்ய போகிறார். இதில் தமிழ்நாட்டின் தேர்தல் பணிகளுக்காக உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட வாய்ப்புள்ளது” என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்  சென்னையில் நடைபெற இருந்த நாளைய பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் இன்று பிற்பகல் அண்ணாமலை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தெலுங்கில் ’மார்ட்டின் லூதர் கிங்’ ஆக மாறிய ’மண்டேலா’!

பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால சாதனை சமன்: யார் இந்த வித்யா ராம்ராஜ்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts