உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கோரிக்கையை 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் அவர்களது போராட்டத்தில் பாஜக கலந்து கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்திற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்திற்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் பணிநியமனத்திற்கு மீண்டும் போட்டித்தேர்வு நடத்தக்கூடாது என்று ஆசிரியர் தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் மே 9-ஆம் தேதியில் இருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தனர்.
இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆசிரியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
“ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டிபிஐ வளாகத்தில் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கான எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.
2021-ஆம் ஆண்டு திமுக வாக்குறுதியில் 2013-ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் நாங்கள் அரசு வேலை கொடுப்போம். புதிதாக தேர்வு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள்.
இன்னும் 48 மணி நேரத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றால் அவர்களது போராட்டத்தில் பாஜக கலந்து கொள்ளும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
அமேசான், ப்ளிப்கார்ட், மீஷோ மீது மத்திய அரசு நடவடிக்கை!