”கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்டது சரியானதே” என்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.
அதனைக்கேட்ட கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் கர்நாடக மாநில பாடல் இசைக்கப்பட்டது.
எல்லோரும் நின்றிருந்த போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து – அவமதிப்பு?
இந்நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலையிடம் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “கர்நாடாகாவில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்று இருந்தேன்.
அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பாக கர்நாடக மாநில பாடல் இசைக்கப்பட வேண்டும் என்று ஈஸ்வரப்பா விரும்பினார்.
ஆனால் அங்கிருந்த நிகழ்ச்சி ஒலிபெருக்கி அமைப்பாளர் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பிவிட்டார். அதுவும் சரியாக கேட்கவில்லை.
இதனையடுத்து தான் ஈஸ்வரப்பா கர்நாடகா மாநில பாடலை போடுமாறு கூறினார். கர்நாடகா என்பதால் முதலில் அம்மாநில பாடல் ஒலிபரப்பட வேண்டும். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்தச் சொன்னது சரியானதே. இதில் அவமதிப்பு எதுவுமில்லை.” என்றார்.
மேலும் அவர், “திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் முதல் அவர்களின் கடைசி தொண்டன் வரை முதல் எதிரி நான் தான். அந்த வரிசையில் தற்போது கனிமொழியும் இணைந்துள்ளார். கர்நாடகாவில் திமுகவால் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரியைக் கூட பாட முடியாது. ஆனால் நான் பாடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.