திமுக எனது உடைகள், கடிகாரம் குறித்துக் கேட்கிறார்கள்: அண்ணாமலை!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக எனது வாழ்க்கையைத் தமிழக மக்களுக்குத் திறந்து காட்டப்போகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் என்ற விழா இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

”இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் என்ற விழாவை பாஜக முதல் முறையாக நடத்திக் கொண்டிருக்கிறது. 190 காலகட்டத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக அரசியலும் மதமும் இணைக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்காக, தேர்தலுக்காக மதம் என்பது உள்ளே வந்து விட்டது. ‘செக்யூலர்’ என்பது என்ன? அது ஒரு குழப்பமான வார்த்தை. நான் மேடையில் இருக்கிறேன். ஜீயர் மேடையில் இருக்கிறார். ஷேக் தாவூத் மேடையில் இருக்கிறார். ஜெய்சிங் மேடையில் இருக்கிறார்.

அவர்களுடைய மதத்தின் அடையாளங்களை என் மேல் நான் போட்டுக் கொண்டால்தான் செக்யூலரா? அண்ணாமலை அண்ணாமலையாக இருப்பான். ஜெய்சிங் ஜெய்சிங்காக இருப்பார்; ஷேக் தாவூத் ஷேக் தாவூத்தாக இருப்பார்.

அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் அவரவர்கள் பின்பற்றுவதுதான் மதச்சார்பின்மை. தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம். அனைத்து மதத்திலிருந்தும் பாஜகவுக்குத் தலைவர்கள் வருவார்கள்.

அதுவரை கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். போலி அரசியலை உடைக்க பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைத் தாண்டி இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை நிறுத்தியதால் பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி எனத் தமிழகத்தில் சில கட்சியினர் பேசுகின்றனர்.

இந்தியா இப்போதுதான் உடனடி முத்தலாக்கை நீக்கியுள்ளது. ஆனால் 1961-ல் பாகிஸ்தான் எடுத்து விட்டது. உடனடி முத்தலாக்கை நீக்கிய 23 வது நாடுதான் இந்தியா , ஆப்கானிஸ்தான் , இலங்கை, வங்கதேசம் , இந்தோனேசியாவில் உடனடி முத்தலாக் நடைமுறை முன்பே தடை செய்யப்பட்டு விட்டது.

இங்கிருக்கும் சிலருக்குப் புரிதல் இல்லை , புத்தகம் படிப்பதில்லை , உலகில் நடக்கும் எதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை , கும்மிடிப்பூண்டிக்கும் சென்னைக்கும் இடையில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசுகின்றனர். பாஜக குறித்துச் சொல்லப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் களை எடுத்து வருகின்றோம் ,2024 ல் மிகப்பெரிய தாக்கத்தைத் தமிழகத்தில் பாஜக ஏற்படுத்தும்.

நான் கவுன்சிலரோ , ஊராட்சி மன்ற தலைவரோ , சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசு பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தற்போது வருமானம் பெறவில்லை, ஆனாலும் என்னிடம் திமுக ஒரு கேள்வி கேட்டுள்ளது.

திமுகவினர் எனது உடைகள் , கடிகாரம் , கார் குறித்து கேள்வி கேட்பதை வரவேற்கிறேன் , இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்ய உள்ளேன்.

தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் , 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்ல உள்ளேன். எனது நடைப்பயணத்தைத் தொடங்கும்போது , நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010 – 11ம் ஆண்டு முதல் எனது வங்கிக் கணக்கு நிதி விவரங்களை , மக்களுக்குச் சமர்ப்பிக்க உள்ளேன்.

கடந்த 13 ஆண்டில் நான் செய்த அனைத்து செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைத்தளத்தில் நடைப்பயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்ய உள்ளேன். 500 ரூபாய் கொடுத்து நான் படத்திற்குச் சென்றிருந்தாலும் அது பதிவாகி இருக்கும்.

தமிழக அரசியலில் முதல் முதலாக என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக தமிழக மக்களுக்குத் திறந்து காட்டப் போகிறேன்” என்று கூறினார்.

மோனிஷா

பீகாரில் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்!

உதயநிதி- விஜய் ஒரே மேடையில்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts