ஜெயலலிதா தமிழகத்தில் மிகச்சிறந்த இந்துத்துவா தலைவராக விளங்கினார் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே 25) கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேச்சு:
ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் பாஜக இருந்தபோதும், இந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்தது. ஏனெனில், இந்து மதத்தின் வளர்ச்சிக்காக ஜெயலலிதா பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
ஜெயலலிதாவின் செயல்பாடுகள் அவர் ஒரு உயர்ந்த இந்துத் தலைவர் என்பதை காட்டும். ஆனால், அவரது மறைவிற்கு பிறகு, அதிமுக இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகியது. எனவே, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது என அண்ணாமலை PTI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு சசிகலா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஜெயக்குமார் கண்டனம்:
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை இன்று (மே 25) வெளியிட்டுள்ளார்.
அதில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். தமிழகத்தில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எம்ஜிஆர் வழியில், ’எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் ஜெயலலிதா.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது. புதிதாக வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
வக்பு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து மதங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்.
தமிழக அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் ஜெயலலிதாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும். அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துள்ளல் அஜித்தை காட்டிய ‘உல்லாசம்’!
மீண்டும் துணை வேந்தர்கள் மாநாடு – ஆளுநர் அழைப்பு!