திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி: அண்ணாமலை

அரசியல்

”திமுக ஆட்சியின் மீது எப்போதெல்லாம் மக்களுக்கு கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக தன்னுடைய கையில் எடுக்கக்கூடிய ஆயுதம் இந்தி” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 15) திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது “மீண்டும் நீங்கள் இந்தி திணிப்பைக் கையிலெடுத்தீர்கள் என்றால் டெல்லிக்கே வந்து போராட்டம் நடத்துவோம்” என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து, இன்று (அக்டோபர் 15) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

annamalai speaks about dmk hindi imposition protest

அப்போது பேசிய அவர், ”திமுக ஆட்சியின் மீது எப்போதெல்லாம் மக்களுக்கு கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக தன்னுடைய கையில் எடுக்கக்கூடிய ஆயுதம் இந்தி எதிர்ப்பு.

1965 முதல் 2022 வரை தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியை திமுகவால் கட்டாயமாக்க முடியவில்லை.

ஆனால் புதிய கல்விக் கொள்கையில் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கட்டாயமாகக் கொண்டுவந்துள்ளோம். இதனை ஏற்றுக் கொள்வதற்குக் கூட திமுகவிற்கு மனப்பக்குவம் இல்லை.

அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் கடைநிலை ஊழியர் யாராவது இந்தியில் கடிதம் எழுதிவிட்டால், அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் ’பாஜக இந்தியைத் திணிக்கிறார்கள் பாருங்கள் பாருங்கள்’ என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போதிலிருந்தே கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை என்பது மும்மொழிக் கொள்கை. அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக உங்களுக்கு விருப்பமான ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். இதனை பல்வேறு தரப்பு மக்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் மட்டும்தான், ’தனியாக ஒரு குழு அமைத்து மாநிலத்திற்கான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவோம்’ என்று கூறுகிறார்கள்.

’மும்மொழிக் கொள்கையில் இந்தி இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இந்தியைக் கட்டாயமாக்குவீர்கள் என்பதால் எதிர்க்கிறோம்’ என்று திமுக கூறுகின்றது.

பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், இந்தியை எங்கேயும் திணிக்கவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடியே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அவரே அரசியல் காரணங்களுக்காக இந்தியை மெதுவாகத்தான் கற்றுக்கொண்டார். ஆகையால் பாஜக எங்கு இந்தியைத் திணிக்கின்றது என்ற தெளிவான பதிலை திமுக அளிக்க வேண்டும்.

இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

திமுக கட்சியில் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக இல்லை என்பதை திமுக தலைவர் சொல்வாரா? அவரால் சொல்ல முடியாது.

ஏனென்றால் நிறையப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக வைத்திருக்கிறார்கள். ஆகையால் ஒருபக்கம் குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

அமைதியாக இருக்கக்கூடிய தமிழகத்தில் இவர்களாகவே பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள்” என்று பேசினார்.

மோனிஷா

மகுடம் சூடிய இந்தியா: பிரதமர் மோடி வாழ்த்து!

கணக்கில் வராத பணம்: பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *