பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அதன் தேசிய தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிற நிலையில்… அதை சற்றே வலிமைப்படுத்துகிற மாதிரி இன்று மார்ச் 22ஆம் தேதி சில சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் இன்று மார்ச் 22ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் கலந்து கொண்டார். இதெல்லாம் அரசு ரீதியான தகவல்கள்.
இந்த நிகழ்வுகளை ஒட்டி அரசியல் ரீதியான தகவல்களையும் பாஜக வட்டாரத்தில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுகிறார்கள்.
“தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை பாரதிய ஜனதா கட்சி சார்பில் முதலில் கவனித்து வந்தவர் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. அவர் அந்தப் பதவிக்கு சென்றதும் தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை சார்பில் சில வருடங்கள் கவனித்து வந்தார் பியூஷ் கோயல்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி விவகாரங்களிலும் கோயல் முக்கிய பங்காற்றினார். இப்படிப்பட்ட தமிழ்நாடு அரசியலுக்கு பரிச்சயமான பியூஷ் கோயல் இன்று அரசு விழாவுக்கு சென்னை வந்தார்.

அவரை தமிழ்நாடு பாஜக சார்பில் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, வி .பி. துரைசாமி ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முக்கியமான அமைச்சரும் தமிழ்நாட்டு அரசியல் விவகாரங்களில் முக்கிய பங்கு ஆற்றி வருபவருமான பியூஷ் கோயலை வரவேற்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்துக்குச் செல்லவில்லை.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டி பகுதியில் இருக்கும் 7 நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டு ஜவுளி பூங்கா நிகழ்ச்சிக்காக புறப்பட்டார்.
அந்த இடைவெளியில் தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாக தகவல். அதற்குப் பிறகுதான் கோயல் அண்ணா நூற்றாண்டு நூலக விழாவுக்கு புறப்பட்டார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஹோட்டலுக்காவது சென்று மத்திய அமைச்சரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கேயும் அண்ணாமலை செல்லவில்லை.

பிரதமரின் மித்ரா ஜவுளி பூங்கா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோரோடு கலந்து கொண்டார் கோயல். அங்கே கரு. நாகராஜன் உள்ளிட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கோயலை சந்தித்தார்கள். விழா முடிந்த பிறகு இன்று இரவு கோயல், முருகன் இருவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்கள்.
மத்திய அமைச்சர் சென்னை வரும் போது தான் அண்ணாமலை வரவேற்கவில்லை… இடையிலே நேரம் இருந்தும் அவரை சந்திக்கவில்லை… பியூஷ் கோயல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்பதால் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
இத்தனைக்கும் இது மத்திய அரசின் சாதனையை பறைசாற்றும் விழா. அதில் அண்ணாமலை மாநில பாஜக தலைவராக பார்வையாளராக கலந்துகொள்ள கடமை உள்ளது. அதிலும் கலந்துகொள்ளவில்லை…
சரி பியூஷ் கோயல் சென்னையை விட்டு புறப்படும் போது வழி அனுப்பவாவது வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இரவு புறப்பட்ட போதும் அண்ணாமலை அவரை வழியனுப்ப செல்லவில்லை.
இதனால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியிலே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலைக்கும் டெல்லி தலைமைக்கும் இடையே இடைவெளி அதிகமாகி கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக தேர்தல் பணிக்காக பெங்களூரு சென்றிருந்த அண்ணாமலை நேற்று மாலையே சென்னை திரும்பிவிட்டார். சென்னையில்தான் தன் இல்லத்தில் இருக்கிறார். ஆனாலும் இன்று மத்திய அமைச்சர்களில் அமித் ஷாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் என்று கருதப்படுகிற பியூஷ் கோயல் சென்னை வருகிறபோது அவரை அண்ணாமலை சந்திக்காதது யூகங்களை அதிகப்படுத்தியிருக்கிறது” என்று பாஜகவிலேயே சில நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

இதுகுறித்து அண்ணாமலைக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது, “நீங்கள் நினைப்பது போலெல்லாம் இல்லை. அண்ணாமலைஜிக்கு முதுகுவலி கொஞ்சம் இருக்கிறது. அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். அதனால் மத்திய அமைச்சரை வரவேற்க செல்லாமல் இருந்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை” என்கிறார்கள்.
அதேநேரம் அண்ணாமலை இன்று நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சௌத்ரியை சந்தித்து என்.எல்.சி. நில கையகப்படுத்துதல் விவகாரம் தொடர்பாக உரையாடியிருக்கிறார். இதை அண்ணாமலையே இன்று (மார்ச் 22) தனது சமூக தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் மத்திய அமைச்சர்களில் முக்கியமானவரான பியூஷ் கோயலை சந்திக்கவில்லை.
ஏதோ நடக்கிறது…
–வேந்தன்
இதுதான் தமிழ்நாட்டின் வேகம்: முதல்வர் பெருமிதம்
மரபணு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் முக்கிய அறிவுரை!
அண்ணாமலையின் மாற்றாட்கள் (பினாமி) அடையாளம் காணப்பட்டு அமலாக்கப் பிரிவு முற்றுகை (raid) நடக்கிறது,