வைஃபை ஆன் செய்ததும், திருவண்ணாமலையில் பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
“செப்டம்பர் 18 ஆம் தேதியே பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அதிமுக அறிவித்து, அதன் பின் செப்டம்பர் 25 ஆம் தேதி மாசெக்கள் கூட்டத்திலும் இது தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று (அக்டோபர் 22) வரைக்கும் இது உண்மையில்லை நாடகம் என்று ஸ்டாலினும், இது நாடகம் இல்லை உண்மைதான் என்று எடப்பாடியும் மாறிமாறி மேடைகளில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் எதற்காக பாஜக-அதிமுக கூட்டணி முறிவு என்பது நாடகம் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்? கூட்டணி முறிவுக்குப் பின் டெல்லிக்கு அண்ணாமலையை அழைத்த பாஜக தேசியத் தலைமை, ‘திமுகவைத் தாக்குவதை மட்டுமே தொடர்ந்து செய்யுங்கள். வேறு யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்’ என்று ஒன் லைன் ஆர்டர் போட்டு அனுப்பியது.
அதன்பின் சென்னை வந்த பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மாநில மையக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கே அவர், ‘மாநிலத்தில் நமது எதிரி திமுக, தேசிய அளவிலே நமது எதிரி காங்கிரஸ். இந்த ஸ்கேலை வைத்து அரசியல் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனார். 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பேசவேண்டிய வகையில் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைப்போம்’ என்று தேசிய பாஜக தலைமை தமிழ்நாடு பாஜகவுக்கு அறிவுறுத்தியதை உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார் ஸ்டாலின்.
அதனால்தான் நேற்று ஐடி விங் விழாவிலும் இன்று திருவண்ணாமலை பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டிலும் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி நாடகம் என கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதற்கு மறுப்பு தெரிவித்து பேசி வரும் அதேநேரம் செயல்பாடுகளிலும் அதை வெளிப்படுத்தி வருகிறார். இன்று (அக்டோபர் 22) சேலத்தில் ஆயிரம் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மற்றும் கொங்கு இளைஞர் பேரவையினர் அதிமுகவில் சேரும் விழாவை நடத்தினார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
மாவட்டச் செயலாளர்களிடத்திலும், சீனியர் நிர்வாகிகளிடத்திலும், ‘உங்க மாவட்டங்களில் இருக்கும் இஸ்லாமிய பிரமுகர்கள், இஸ்லாமிய அமைப்புகளை அதிமுக பக்கம் கொண்டுவாங்க. இனிமேல் பாஜகவோடு நமக்கு எந்த உறவும் இல்லைனு தெளிவா எடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்கு தயக்கம் இருந்தா என்கிட்ட சொல்லுங்க., தேவைப்பட்டா நானே அவங்களிடம் போன்ல பேசுறேன். அடுத்த சில மாதங்களில் இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள், ஆங்காங்கே இருக்கும் இஸ்லாமிய புள்ளிகளை கட்சிக்குக் கொண்டு வரணும். ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியே போன முஸ்லிம் பிரமுகர்கள்கிட்டையும் பேசுங்க’ என்று முடுக்கிவிட்டு வருகிறார். அந்த வகையில்தான் சேலத்தில் இன்று இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அதிமுகவில் இணைப்பு விழா நடைபெற்றது.
இதுமட்டுமல்ல சசிகலாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசுவின் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளையும் தங்கமணி மூலமாக அதிமுகவுக்கு இழுத்துவிட்டார் எடப்பாடி.
இப்படியாக ஸ்டாலின் தினந்தோறும் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு நாடகம் என்று பேசிக் கொண்டிருக்க, அதிமுகவோ இதுபற்றி தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் டெல்லி உத்தரவுப்படி இதுவரை அதிமுகவைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அலர்ட் மெசேஜ் வரலைன்னா ஆன்ட்டி இந்தியனா? அப்டேட் குமாரு
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு!