தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (ஜனவரி 20) கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக காலை 9.45 மணியளவில் உயர் மட்டக்குழு ஒரு தனியார் ஹோட்டலில் கூடியது. அதில் 58 பேர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் என்னென்ன பேச வேண்டும், எது பேசக்கூடாது என ஆலோசனைகள் செய்தவர்கள், 9 தீர்மானங்களில் 6வது தீர்மானமான தமிழக பெண் இனத்தை காக்க தவறிய திமுக அரசைக் கண்டிக்கும் தீர்மானத்தை மட்டும் நீக்க முடிவு செய்தனர்.
திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாருக்கு தொந்தரவு கொடுத்த திமுகவினரின் செயல்களை கண்டித்து இந்த தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது. உயர் மட்டக் குழுவில், ‘பெண்கள் விஷயத்தில் பாஜக மீதே சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இந்தத் தீர்மானத்தை வாசிக்க வேண்டாம்’ என்று சிலர் வலியுறுத்த அதை ஏற்றுக் கொண்டு அந்த ஆறாவது தீர்மானத்தின் மீது மட்டும் வட்டமிட்டார் அண்ணாமலை.
அதன்படியே செயற்குழு கூட்டத்தில் பெண் விவகாரம் சம்பந்தப்பட்ட தீர்மானம் முன்மொழியப்படவில்லை. மொத்தம் ஒன்பது தீர்மானம் என்று அறிவிக்கப்பட்டாலும் செயற்குழுவில் எட்டு தீர்மானங்கள்தான் வாசிக்கப்பட்டன.
ஒரு மணிநேரம் உயர் மட்ட குழு கூட்டம் முடிந்ததும், செயற்குழு கூட்டம் நடைபெறும் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். 11 மணிக்கு செயற்குழு கூட்டம் துவங்கியது.
கூட்டத்திற்கு 430 பேருக்கு அழைப்புகள் கொடுக்கப்பட்டதில் 367 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். துவக்கத்தில் பத்திரிகையாளர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அப்போது நடிகை நமீதா இருக்கை பக்கத்தில் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உட்கார்ந்து இருந்த வீடியோ, சேனல்களில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டே இருக்க, அது வாட்ஸ் அப்பில் பரவியது.
அதை செயற்குழு கூட்டத்தில் இருந்தவர்களும் பார்க்க, அது நமிதா கவனத்திற்கும் வந்தது. என்ன நினைத்தாரோ கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார் நடிகை நமீதா.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “பாமக ராமதாஸ் ஒரு சாதியை நம்பி கட்சி நடத்தியதால் அந்த கட்சி வளர முடியவில்லை. நமது கட்சி சாதி மதம் இல்லாமல் கட்சி நடத்துகிறோம் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம்” என்றார்,
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் அதை மக்களுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பாக ஜல்ஜீவன் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அந்த திட்டத்தில் முறைகேடுகள், ஊழல்கள் நடக்கின்றன. இவற்றையும் நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
நிறைவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் நமக்கு இருக்கக்கூடிய 13 மாதங்கள் கோல்டன் பீரியட். நீங்கள் நிற்காமல் ஓட வேண்டும். நீங்கள் நாளை முதல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது, பேசக்கூடாது. அப்படி முக்கியமானதாக இருந்தால் தலைமையைக் கேட்டுக்கொண்டுதான் பேச வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் தலைவர் நட்டாவை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதுபோலவே இங்குள்ள மாநிலத் தலைவர்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் மக்களிடம் செல்ல வேண்டும். மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ளும் வரையில் மூன்று நாட்கள் ஆனாலும் அவர்கள் வீட்டிலேயே தங்குங்கள்.
ஜனவரி 26ஆம் தேதி, முதலில் முதல்வர் குடும்பத்தின் ஊழல் பட்டியல்களை வெளியிடப் போகிறேன். 18 அமைச்சர்களின் 2.24 லட்சம் கோடி ஊழல் பட்டியல்களை அடுத்து வெளியிட போகிறேன்.
அப்போது என் மீது தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள். கடுமையான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள். அப்போது நீங்கள் யாரும் அவசரப்பட்டு பதில் கொடுக்க வேண்டாம். நீங்கள் கட்சி பணியை மட்டும் பாருங்கள்.
எனக்கு ரிவர்ஸ் கியர் இல்லை, பேக் கியர் இல்லை, டவுன் கியர் இல்லை ஒன்லி அப் கியர் மட்டும்தான். அதனால் நான் கவலைப்படுவது இல்லை. 2024 தேர்தலில் போட்டியிட நம்மிடம் எக்ஸலன்ட் கேண்டிடேட்கள் ரெடியாக இருக்கிறார்கள். திமுக வேட்பாளர்களை விட நமது வேட்பாளர்கள் சிறப்பாகவும் சூப்பராகவும் இருப்பார்கள்.
நான் ஓட்டும் விமானத்தில் பயணிக்கும் உங்களுக்கு பயம் இருக்கும். ’என்னடா இவன் ஓட்டும் விமானம் உயரத்திலும் பறக்கவில்லை… கீழேயும் இறங்கவில்லை… கீழே இறக்கி விட்டால் ஒடி தப்பித்து விடலாம். எதுக்கும் இல்லாமல் ஒரே இடத்தில் நிற்கிறது.
விமானம் ஆடுது அதிருது பயமா இருக்கு’ என்று உங்களுக்குத் தோன்றலாம். 2024இல் கிளியரன்ஸ் கிடைக்கும். அப்போதுதான் மேகத்திற்கு மேலே விமானம் பறக்கும். அப்போது நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பீர்கள். அதனால் நான் ஓட்டும் (அரசியல்) விமானத்தில் பயம் இல்லாமல் நம்பிகையோடு பயணியுங்கள்.
மற்றவர்களிடம் திரும்பப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். இப்போது கூட அண்ணன் கேசவ விநாயகமும் நமீதாவும் அருகருகே உட்கார்ந்து இருந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
அதற்கெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நமது எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்புவோம்” என்ற அண்ணாமலை கூட்டணி பற்றி முக்கியமான விஷயங்களையும் இந்த கூட்டத்தில் பேசினார்.
“இப்போது நாம் கூட்டணியில்தான் இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் பாஜகவை யாரும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் அனைவரும் புறக்கணித்து விட்டார்கள் என்றும் தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்கவில்லை என்றும் தவறான செய்திகளை பரப்பி விடுவார்கள்.
எனவே இப்போதைக்கு நாம் கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்பதை உறுதி செய்துள்ளார் அண்ணாமலை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி எதுவும் அண்ணாமலை பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணங்காமுடி
“இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ அவருக்கே ஆதரவு”- ஜான் பாண்டியன்