கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரிக்க முடியாது என கன்னியாகுமரியில் இன்று (மார்ச் 15) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக, தமிழகத்தை குறிவைத்து பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொதுக்கூட்டங்களில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.
இதையடுத்து, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று (மார்ச் 15) நடைபெற்று வரும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார்.
இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர், “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் இந்திய நாட்டின் பிரதமர் ஆவார். குமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரிக்க முடியாது. கன்னியாகுமரியில் கடந்த 1995-ஆம் ஆண்டில் ஏக்தா யாத்திரையை தொடங்கியபோது பிரதமர் மோடியின் முக்கிய பங்கு அதில் இருந்தது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுகளுடன் பிரதமர் மோடி இங்கு வருகை தந்துள்ளார். 400 தொகுதிகளில் வெற்றி என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது பாஜக தொண்டர்களின் உணர்வு. 1892-ல் கன்னியாகுமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார். அதே போன்று, தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார். 140 கோடி மக்களின் விஸ்வகுருவாக பிரதமர் மோடி திகழ்கிறார்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டின் எதிரி திமுக: மோடி தாக்கு!
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு!