செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றது சும்மா தான் அடுத்து அமைச்சர் மூர்த்திக்கு நடப்பதை மட்டும் பாருங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை ஜூலை 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கினார். இன்று (ஆகஸ்ட் 4) மதுரை மாவட்டம் மேலூர் முதல் சோழவந்தான் வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
மேலூரில் அண்ணாமலை பேசியபோது, “செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் யாரும் சரியில்லையா?, செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து 45 நாட்களாக ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்.
மத்திய அரசு பணத்தை எடுத்து ரூ.1000 மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்கள். மதுரை தொகுதி எம்.பி போஸ்டர்களிலும், புத்தக வெளியீட்டு விழாக்களில் மட்டும் தான் இருப்பார். யாருக்கும் உபயோகமில்லாதவராக சு.வெங்கடேசன் உள்ளார். பிடிஆர் ஆடியோ வெளியிட்ட பின்பு நான்கு மாதங்களாக பேசாமல் உள்ளார்.
ரேஷன் கடைகளில் எல்லாம் கலைஞர் மற்றும் ஸ்டாலின் போட்டாக்கள் மட்டும் தான் உள்ளது. டாஸ்மாக்கிலும் ஸ்டாலின் போட்டோ வைக்க வேண்டும். கடன் வாங்குவதிலும் டாஸ்மாக்கிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. செந்தில் பாலாஜி உள்ளே போனது சும்மா தான். அடுத்து மூர்த்தி அண்ணனுக்கு நடப்பதை மட்டும் பாருங்கள். நான் சொல்லி ஏதாவது நடந்துவிட்டால் அண்ணாமலை சொன்னதால் நடந்துவிட்டது என்பார்கள். சத்தியமாக எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. குலதெய்வத்தின் மீது ஆணையாக சம்பந்தமில்லை. ஆனால் நடந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாரா? – தீர்ப்பு ஒத்திவைப்பு!