சாட்டையடி போராட்டம் என்பது தமிழ் மண்ணின் மரபு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 27) தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பாக அண்ணாமலை இன்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜக இன்று முன்னெடுத்திருக்கக்கூடிய போராட்டம் ஒரு தனி மனிதனின் போராட்டம் கிடையாது. தமிழகத்தில் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் காலணி அணியப்போவதில்லை. நம்முடைய மண்ணில் உடலை வருத்திக்கொண்டு ஒரு விஷயத்தை கடவுளிடம் முறையிடும் போது அதற்கான பலன் கிடைக்கும்.
முருகப்பெருமானுக்கு இந்த ஆறு சாட்டையடிகளையும் வேண்டுதலாக சமர்ப்பிக்கிறேன். சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அவலங்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்துதான் சாட்டையால் அடித்துக்கொண்டேன். சாட்டையடி என்பது தமிழ் மண்ணின் மரபு. அதை தான் நான் கடைபிடித்தேன்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான எஃப்.ஐ.ஆரை வெளியிட்டு அவரது வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் காவலர்கள் மீது எனக்கு கோபமில்லை. காவலர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
லண்டன் பயணத்திற்கு பின்னர் எனது அரசியல் பாதை தெளிவாகியிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்ற உறுதித்தன்மை அதிகரித்திருக்கிறது. எனக்கு நிறைய புரிதல் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட அணையை கட்டும் சீனா: இந்தியா மீது வாட்டர் பாம் வீச திட்டம்?