சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்து போட மறுத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, சங்கரய்யா தமிழகத்தின் சொத்து என்று தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“மூன்றாண்டுகளாக தென் தமிழகத்தில் நடைபெறும் குருபூஜைக்கு செல்கிறேன். இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்கு செல்வது போன்று தான் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜாதி கலவரம் உருவாவதற்கு திமுக அரசு தான் காரணமாக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை பாட புத்தகத்தில் இடம்பெற செய்யாமல் திமுக அரசு இருட்டடிப்பு செய்துள்ளது. எந்த ஊரில் பேருந்து நிலையம் வைத்தாலும் கலைஞர் பெயர் வைப்பதற்கு காரணம் என்ன?
தமிழக ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆளுநர் கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லாததால் தரக்குறைவாக பேசுகிறார்.
ஆளுநர் தன்னுடைய வேலைகளை செய்கிறார். திமுகவில் எம்.பி சீட் கிடைத்துவிடாதா என்ற ஆசையில் டி.ஆர்.பாலு ஆளுநரை விமர்சனம் செய்கிறார்,
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். கையெழுத்து வாங்கி என்ன நடக்க போகிறது. சாமானிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துகிறார்கள்.
நீட் தேர்வு குறித்து வெள்ளை அறிக்கை தர மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,
“தமிழகத்தின் சொத்து சங்கரய்யா. சித்தாந்த அடிப்படையில் மாறுபட்டிருந்தாலும் முக்கியமான தலைவர். ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் என்று ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “சிரிப்பு தான் எனது பதில்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு தேதி அறிவிப்பு!
சசிகுமார் படத்தை இயக்கும் வேல்ராஜ்