மணிப்பூர் விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்வது வேடிக்கையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மணல் மற்றும் கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்,
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுக பாதி ஆட்சிகாலம் முடிந்து விட்டது. இந்த ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கூட கொடுக்க முடியாது. மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் தமிழகத்தில் ஊழலோடு சென்று சேர்கிறது. மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை. மணிப்பூர் பிரச்சனையை மத்திய அரசும் மாநில அரசும் சரி செய்வார்கள். மணிப்பூர் கொடூரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் 2014-க்கு முன்பாக நிறைய கொலைகள் நடந்தது. 2014-க்கு பிறகு அமைதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. கடந்த மே மாதம் முதல் மீண்டும் வன்முறை துவங்கியுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்வது வேடிக்கையாக உள்ளது. கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரி நீரை முழுமையாக பெற்று தர வேண்டும். தமிழகம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. பிரிவினைவாதம் பேசியவர்கள் இந்தியா கூட்டணி என்று சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ சோதனை” – முபாரக்
கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவில் மிரட்டும் சூர்யா