தன் மீதும் பாஜக மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை சுமத்திய ஆர்.எஸ்.பாரதி 48 மணி நேரத்திற்குள் அதற்கான தகுந்த விளக்கங்களை அளிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியலை அண்ணாமலை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டார். அடிப்படை ஆதாரமற்ற வகையில் திமுக நிர்வாகிகள் மீது அண்ணாமலை அவதூறு பரப்பும் வகையில் சொத்து பட்டியல் வெளியிட்டதற்கு ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று ஆர்.எஸ் பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவின் சட்ட நடவடிக்கைகளை தான் எதிர்கொள்ள தயார் என்றும்,
ஆருத்ரா விவகாரத்தில் என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியதற்காக ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.
என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு,
ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.
4400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்து,
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் நான் பார்த்தேன்.
100 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் முக ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும், ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்?.
அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால்,
ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.
செல்வம்
சைகை மொழியில் சட்டமன்ற நிகழ்வு: ஸ்டாலின் துவக்கி வைத்தார்!
சென்னை-பெங்களூரு இன்று பலப்பரீட்சை: யாருக்கு வெற்றி?
