என்எல்சியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 27) செய்தியாளர்களிடம் பேசியபோது, “ராமேஸ்வரத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை நாளை தொடங்க உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 164 நாட்களில் 234 தொகுதிகள் செல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி மாதத்தில் முடிக்க உள்ளோம்.
234 தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 164 நாட்களில் ஜனவரி 11ஆம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் மூலம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பொதுமக்களிடம் கொண்டு செல்வது நோக்கம்.
யாத்திரையின் இடையே 10 முக்கிய நகரங்களில் கூட்டம் நடத்த உள்ளோம். மாநாடு நடைபெறும் இடங்களில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள். 29ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் சட்டமன்ற தொகுதி யாத்திரை துவக்கம்.
என் மண் என் மக்கள் யாத்திரைக்கு கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்திருக்கிறோம். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிட போகிறோம். எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசினேன். மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவர் இன்னும் உறுதி செய்யவில்லை. நாங்கள் கொடுத்த ஊழல் பட்டியலுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். ஊழலுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்.
என்எல்சி பகுதியில் விளைநிலங்களில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து சேதப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது. என்எல்சியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
அங்குள்ளவர்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு ஆகியவை வழங்க வருவாய் துறை மற்றும் என்எல்சி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கி 14,000 பேருக்கு வேலை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு வரும் ஸ்டெர்லைட் அதிபர்: எச்சரிக்கை விடுத்த திருமுருகன் காந்தி!
பாட்டுக்குயிலுக்கு வயது அறுபது!