அமலாக்கத்துறை அதிகாரி கைது: அண்ணாமலை ரியாக்ஷன்!
ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டதற்காக மொத்த அமலாக்கத்துறையையும் மோசம் என்று கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நேற்று (டிசம்பர் 1) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளில் இதற்கு முன்பும் டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மனிதன் தவறு செய்ததற்காக மொத்த அமலாக்கத்துறையையும் மோசம் என்று கூற முடியாது. தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக தமிழக காவல்துறையே மோசம் என்று கூறிவிட முடியாது. தவறு செய்வது மனிதனின் இயல்பு.
அமலாக்கத்துறையில் தவறு செய்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அமலாக்கத்துறை என்பதால் இன்னும் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும்.
தமிழக காவல்துறை இதனை ப்ரொபஷனலாக அணுக வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கைது செய்ய முழு அதிகாரம் இருக்கிறது. இதை அரசியலாக பார்க்க வேண்டாம். தமிழக அரசியல்வாதிகளுக்கு இது புரியாது. இங்கு மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள் தான் உள்ளனர். இது தமிழகத்தின் சாபக்கேடு” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்
வைபவின் அலாவுதீன் வெர்ஷன்: “ஆலம்பனா” ட்ரெய்லர் ரிலீஸ்!