ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு… எதை சொல்கிறார் அண்ணாமலை?

Published On:

| By Selvam

“விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்தார். ஆனால், அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி உடனடியாக முதல்வர் ஸ்டாலின் மதுரை கிளம்பி செல்கிறார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 26) குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய கனிமளவத்துறை அமைச்சகம் ஜனவரி 23-ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து, அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினை நேற்று (ஜனவரி 25) சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். பொதுமக்களின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்கிறார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஸ்டாலின் ஆறுதல் கூறவில்லை.

ஆனால், தற்போது பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share