டங்ஸ்டன் சுரங்கம்… அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி!

Published On:

| By Selvam

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கிறது.

சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் இன்று (டிசம்பர் 9) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

இந்தநிலையில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று தன்னிடம் உறுதியளித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 9) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்குக் கடிதம் எழுதினேன்.

மேலும், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், பிரதமர் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாமலை Vs ஆர்.எஸ்.பாரதி: தீவிரமாகும் மோதல்!

அப்படியெல்லாம் வர முடியாது: இளையராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share