அதிமுக – பாஜக கூட்டணி: அண்ணாமலை சொல்வது என்ன?

அரசியல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவின் வளர்ச்சி, 2024, 2026 தேர்தல்கள், தொண்டர்கள் தலைவர்கள் விருப்பம், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நான் பேசினேன்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தை நான் கூறவில்லை. இப்பொழுதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக முக்கிய கட்சியாக இருக்கிறது.

2024-ஆம் ஆண்டு தேர்தலில் தூய்மையான அரசியல் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நான் ஒருவேளை 2024-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டால் தூய்மையான அரசியலை முன்னெடுப்பேன்.

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. தொகுதி பங்கீடு, கொள்கை, எந்த தொகுதிகளில் பாஜக நிற்க வேண்டும் என்று நிறைய விஷயங்கள் உள்ளது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் கிடையாது. அரசியல் கூட்டணி என்பது நீரை போன்றது.

அகில இந்திய தலைவர்கள் நன்றாக யோசனை செய்துவிட்டு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கிறார்கள். மாநில தலைவராக என்னுடைய கருத்தை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. தொகுதி பங்கீடு முடிந்தால் தான் கூட்டணி கட்சி உறுதியாகி விட்டது என்று கூற முடியும்.

தமிழகத்தில் பாஜகவை 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு வலுப்படுத்த வேண்டும். தென்காசி, ராமநாதபுரத்தில் கட்சியின் மாற்றத்திற்கான ஒரு எழுச்சியை நான் பார்த்தேன். பாஜக மிக வேகமாக அங்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.

நான் பெங்களூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தேன். எஸ்.பி வேலுமணி மதுரை செல்வதற்காக வந்தார். நிர்மலா சீதாராமன் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார்கள். அதனால் மூன்று பேரும் யதார்த்தமாக சந்தித்தோம்.

ஏப்ரல் 14-ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல், வாட்ச் பில் ஆகியவற்றை கொடுப்போம்” என்றார்.

செல்வம்

”12 ஆண்டுகளுக்கு முன்பு… நீங்கள்?”: சச்சின் கேட்ட கேள்வி!

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *