நம் ஒவ்வொருவருடைய மதங்களிலும் வெவ்வேறு சம்பிரதாயங்கள், சடங்குகள் இருந்தாலும் சகோதரத்துவம் மட்டுமே நம்மை இணைக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஏப்ரல் 20) பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி, பாஜக மாநில துணை தலைவர் கருநாகராஜன், மாநில சிறுபான்மை அணி துணை தலைவர் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இஃதார் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக அண்ணாமலை பேசும்போது, “நாம் வெவ்வேறு மதங்களில் பிறந்திருந்தாலும் இந்தியர் என்கிற உணர்வில் இணைந்திருக்கிறோம்.
நம் மதங்களுக்கு வெவ்வேறு சம்பிரதாயங்கள், சடங்குகள் இருக்கிறது. சகோதரத்துவம் மட்டுமே நம்மை இணைக்கிறது.
இது மிக அற்புதமான மாதமாக இஸ்லாம் சமூக மக்களுக்கு அமைந்துள்ளது. பாஜகவில் சிறுபான்மை பிரிவு மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய பிரிவாகும்.

எந்தவிதமான வேற்றுமையும் நம்மை பிரிக்கக்கூடாது என்பதற்காக தான் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளை நாம் கொண்டாடுகிறோம்.
நம்மை எதிர்க்க முடியாதவர்கள் பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.
செல்வம்