விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று (ஜூலை 4) விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பேசும்போது, “தமிழக அரசியலில் மாற்றத்திற்காக ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை தருவார். இந்த இடைத்தேர்தல் மாற்றத்திற்கான வாய்ப்பாக நமக்கு அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக நாம் இங்கே கூடியுள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருக்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவராக அவர் உள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ராமதாஸ் டெல்லியில் அவரை சந்திக்க நேரம் கேட்டார்.
ராமதாஸ் அவர்களை பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்திற்கு அழைக்கிறார். அவரிடம் ராமதாஸ், நான் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் செல்லக் கூடாது என்ற கோட்பாட்டோடு அரசியல் செய்துகொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக நாடாளுமன்றம் சென்றுவிட்டு பிரதமர் இல்லத்திற்கு வந்துவிடுகிறேன். அங்கே நாம் சந்திப்போம் என்று வாஜ்பாய் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வருபவர் ராமதாஸ்.
இங்கே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் எப்படி மந்திரச்சொல்லாக மாறியதோ, அதேபோல என்.டி.ஏ கூட்டணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மந்திரச்சொல்லாக மாறும்.
திமுக என்றால் தீயசக்தி என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பேசுவார். அதனால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்டிஏ கூட்டணியை கைவிடமாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் பாமக சின்னத்திற்கு தான் வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்… அரசுக்கு அண்ணாமலை, ராமதாஸ் கண்டனம்!
பானிபூரி சாப்பிட்டால் கேன்சர்? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?