அதிமுக அணையப்போகிற விளக்கு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மே 30) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அதிமுக இந்துத்துவ கொள்கைகளில் இருந்து விலகியது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், “ஜெயலலிதா சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவர். அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இந்துத்துவா என்பது யாருக்கும் எதிரி கிடையாது.
இந்துத்துவா என்ற பெயரில் இஸ்லாமையும், கிறிஸ்த்துவத்தையும் ஒருவர் வெறுக்கிறார் என்றால் அவர் இந்த்துத்துவா கிடையாது. ஆரோக்கியமான ஒரு கருத்து பரிமாற்றம் நடக்கிறது. அதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.
ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு அதிமுக என்ற கட்சி எங்கிருக்கப்போகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும் என்று சொல்வார்கள். அதிமுக என்ற விளக்கு அணையப்போவதால் விமர்சனம் கடுமையாக இருக்கிறது. கோவையில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
பாஜகவின் வெற்றி என்பது தனிப்பட்ட மனிதரின் வெற்றி கிடையாது. தமிழகத்திற்கு நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகிறோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் டும் டும் டும்… இன்விடேஷன் ரெடி!
இசை விழாவிற்கு தயாரான இந்தியன் 2: எப்போது தெரியுமா?
ஜூன் நாலாந்தேதிக்கு அப்புறம் இந்த டயலாக்கை சொல்லலாமே