அதிமுகவுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சனையுமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்ட நிலையில் மூன்று நாட்கள் கழித்து அண்ணாமலை தனது மெளனத்தை இன்று (செப்டம்பர் 21) கலைத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான்கு நாட்களாக அதிமுக தலைவர்கள் என்னை பற்றி பேசியுள்ளார்கள்.
அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை.
பாஜகவை பொறுத்தவரை நாங்கள் மோடியினுடைய கட்சி. இந்த கூட்டணியின் மையப்புள்ளி மோடி.
பிரதமர் மோடியை யாரெல்லாம் பிரதமராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளனர். அதிமுகவும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை சில விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். அரசியல் இப்படி தான் பண்ணனும் என்று தெளிவாக உள்ளேன்.
அந்த மாதிரி அரசியல் தான் செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளேன். நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை.
ஆனால் என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கினால் பதில் பேசுவேன். தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்வதற்காக நான் இங்கு வரவில்லை. எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. தமிழக பாஜகவிற்கும் யாரிடமும் பிரச்சனை இல்லை.
அதிமுக மூத்த தலைவர்கள் பேசியதற்கு தேசிய தலைமை தான் பதில் சொல்ல வேண்டும். சித்தாந்தந்தின் அடிப்படையில் அனைத்து கட்சிகளும் வேறு. அதனால் முட்டல் மோதல் வருவது சகஜம் தான்.
எல்லா பிரச்சனைகளையும் இரண்டு கட்சிகளும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயற்கையாக சில கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு தான்.
அறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு நான் பல இடங்களில் பேசியுள்ளேன். மது ஒழிப்பிற்கு தமிழகத்தின் இலக்கணம் அண்ணா. குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரக்குறைவாக எங்கேயும் விமர்சித்தது கிடையாது.
சனாதன தர்மத்தை எப்படி பாஜக ஆக்ரோஷமாக மக்களிடம் பேசுகிறதோ அதனை அதிமுக மக்களிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
தேசிய கட்சிகளுக்கு ஒரு மாண்பு இருக்கிறது. தேசிய கட்சிகள் அணுகக்கூடிய பிரச்சனைகளில் சில வித்தியாசம் இருக்கிறது.
அதிமுக தலைவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. செல்லூர் ராஜூ அண்ணன் சொல்வது போல மத்தியில் மோடி மாநிலத்தில் எடப்பாடி என்பதை தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
என்னை பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக தான் நான் தலைவராக இருக்கிறேன். என்னை தலைவராக கொண்டுவரும் போது என்ன பிரச்சனை இருக்கும் என்று பாஜக தலைவர்களுக்கு இருக்கும்.
நான் ரிபெல். ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்வேன். பாஜக வளரவேண்டும் என்று நினைக்கிறேன். எந்த கட்சிக்கும் பாஜக போட்டியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சின்னம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஓபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!