மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று டெல்லி செல்வதற்கு முன்னதாக கோவையில் பேட்டியளித்த அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் பகுதியில் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 1) தூய்மை பணி மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கொங்கு மண்டலத்தில் இளைஞர்கள், மகளிர் அதிகளவில் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்கள். ஜனவரி 2-ஆவது வாரத்தில் நடைபயணம் முடியும் போது தமிழகத்தில் பாஜகவிற்கு எழுச்சி ஏற்பட்டிருக்கும்.
என் மண் என் மக்கள் நடைபயணம் குறித்த விவரங்களை பாஜக தேசிய தலைவர்களிடம் எடுத்துரைக்கவே டெல்லி செல்கிறேன். நடைபயணம் முதல் கட்டம் முடிந்த பிறகு டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்தித்து யாத்திரை குறித்த விவரங்களை எடுத்துரைத்தேன். நான்கு நாட்கள் ஓய்வில் இருக்கிறேன். அதனால் இன்று டெல்லி சென்று தலைவர்களை சந்திக்க உள்ளேன். தமிழக பாஜக கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்.
ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அது எங்கே போய் முடியும் என்று தெரியாது. நிறைய நெகட்டிவிட்டி இருக்கக்கூடிய வேலை தான் அரசியல். பாசிட்டிவிட்டி குறைவாக இருக்கும். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் பேசுவார்கள். தூய்மையான அரசியலை தமிழகத்தில் பின்பற்ற பார்க்கிறோம். தூய்மையான அரசியல் வளர காலமாகும். தூய்மையான அரசியலில் தோல்விகள் நிச்சயம். அதையெல்லாம் தாண்டி தான் நிற்கிறோம். தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக இருக்கிறோம். தமிழ்நாடு தூய்மை அரசியலுக்கு இலக்கணமாக இருக்க முடியும். இளைஞர்கள் பெருமளவில் வர வேண்டும். யாத்திரைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை தான் என்று கோவையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியலில் இருந்து என்னை விட்டுவிட்டால் எனது தோட்டத்திற்கு சென்று வேலை செய்வேன். அரசியலில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என நினைக்கிறேன். 9 மாதங்கள் என்ஜிஓ நடத்திக்கொண்டிருக்கிறேன். அரசியலை பொறுத்தவரை 70 சதவிகிதம் நெகட்டிவ், 30 சதவிகிதம் பாசிட்டிவ். ஆக்ரோஷமான உணர்வுகள், சித்தாந்த அடிப்படையிலான சண்டைகளை தாங்கி நிற்கிறோம்” என்றார்.
நெற்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ” அரசியல் வந்த புதிதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பார்த்தேன். சிலர் அரசியலை அதிகாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். தவறான மனிதர்களாக இருந்தாலும் தன்னை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக சிலர் பார்க்கிறார்கள். அதற்கு பாஜக வாய்ப்பு கொடுத்திருப்பதாக பார்க்கிறேன். பாஜகவின் பதவியை தவறாக பயன்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.
டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக பொய் பேசுவதற்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் பாஜக கருத்து போட்டாலே அவதூறு என்று திமுகவுக்கு பயம். இன்று காலை நாமக்கல்லை சேர்ந்த பாஜக ஐடி விங் நிர்வாகியை கைது செய்திருக்கிறார்கள். முதல்வருக்கு சமூக வலைதளத்தை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
கூட்டணி முறிவு குறித்து டெல்லி தேசிய தலைமை எந்த அறிக்கையும் கேட்கவில்லை. இது கார்ப்பரேட் கம்பெனி இல்லை, பாலிடிக்ஸ். தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்கள் உள்ளது. தற்போதைய நோக்கம் கட்சியை வலுப்படுத்துவது தான். அரசியலை பொறுத்தவரை சில விஷயங்கள் வரப்பிரசாதமாக அமையும். எனக்கு கள அரசியல் தெரியும்.
தினமும் 25 ஆயிரம் மக்களை சந்திக்கிறேன். தமிழகத்தில் 57 சதவிகித வாக்காளர்கள் 35 வயதிற்கு கீழ் உள்ளனர். எங்களுடைய அரசியல் அவர்களை சார்ந்தது. மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. அரசியலில் பதவிக்காக நான் வரவில்லை. பதவியை தூக்கி போட்டு வந்தவன். எனக்கென்று தனி உலகம் இருக்கிறது. அரசியலில் என்னுடைய கருத்துக்களை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னை யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனக்காக வேண்டுமானால் சில பேர் மாறலாம். பாஜக மீது அனைவருக்கும் வெறுப்பு உள்ளது. எல்லோரும் சேர்ந்து ஒரு மரத்தை கல்லடித்து அடித்தால் அந்த மரம் வளரும். என்னை இரண்டு வருடமாக கல்லெடுத்து அடிக்கிறார்கள். கூட்டணி முறிவு குறித்து தலைமை இதுவரை விளக்கம் கேட்கவில்லை. என்டிஏ கூட்டணி தமிழகத்தில் நிறைய தொகுதிகளில் வெல்லும். தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம் உள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
’தலைவர் 170’: மீண்டும் ரஜினி – அனிருத் மேஜிக்..!