ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரன் தலைமையில் அணிவகுத்து நிற்க போகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 13) தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளரும் வேட்பாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை இன்று (ஏப்ரல் 13) பிரச்சாரம் செய்தார்.
அப்போது அண்ணாமலை பேசுகையில், “டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தேனிக்கு வந்து டிடிவி தினகரனைப் பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். காரணம், இருவருக்கும் டிடிவி தினகரனை பிடிக்காது. இவர் வெற்றி பெற்று விட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்று இருவருக்கும் தெரியும்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துள்ளனர். அதனால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. காண்ட்ராக்டர்களுக்காக நடத்தப்படக்கூடிய ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான்.
காலம் சென்ற நமது அம்மா அவர்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை காண்ட்ராக்டர்களிடம் தாரைவார்த்துள்ளார். அவர் காண்ட்ராக்டர்களுக்கு மட்டும் தான் சீட் கொடுத்துள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக கட்சி நடத்துகிறார். கேட்டால் தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்ற போகிறேன் என்கிறார். உண்மையான அதிமுக தொண்டர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது. அந்த தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பின்பு அணிவகுத்து நிற்க போகிறார்கள். இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமோ, பயமோ கிடையாது.
தவறு செய்பவர்களை தவறு செய்கிறவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவும், அதிமுக தலைவர்களும் செட்டிங் போட்டார்கள். அதனால் தான் எந்த இடத்திலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது.
2021 தேர்தலில் எங்கள் கூட்டணியில் அமமுக இருந்திருந்தால் இன்றைக்கு முதல்வராக ஸ்டாலின் வந்திருக்க மாட்டார். மக்கள் செல்வாக்கு டிடிவி தினகரனுக்கு இருக்கிறது என்பதற்காக அவர் அதிமுகவால் வெளியே நிறுத்தப்பட்டார்.
அதனால் தான் உறுதியாக நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு அதிமுக எந்த உண்மையான தலைவர் கைக்கு வர வேண்டுமோ, அவரது கைக்கு வரத்தான் போகிறது.
அதுவரை கூச்சல் போடலாம், முன்னாள் அமைச்சர்கள் பத்து பேரை வைத்துக்கொண்டு பிரஸ் மீட் போட்டு திட்டலாம், ஆனால் யார் இங்கு எட்டப்பன் என்பதில் தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜி.வி.பிரகாஷின் டியர் இன்னொரு குட் நைட்டா? – திரை விமர்சனம்!
சனாதனத்தை அவமதிக்கும் திமுக: அமித்ஷா தாக்கு!