அண்ணாமலை ராஜினாமா? அதிமுக கருத்து!

Published On:

| By Aara

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று (மார்ச் 17) பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தார். இந்தத் தகவலை மின்னம்பலம் முதன் முதலாக நேற்று வெளியிட்டது.  நேற்று இரவு முதல்  அரசியல் அரங்கில் இதுதான் விவாதப் பொருளாக உள்ளது.  இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு பற்றி அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று (மார்ச் 18) கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், அண்ணாமலை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,  “கூட்டம் இரு வகைப்படும். உள்ளரங்க கூட்டம், பொதுவெளிக் கூட்டம். பொதுவெளியில் பேசப்படும் கருத்து பற்றி கருத்து சொல்லலாம். ஆனால் உள்ளரங்க கூட்டத்தில் பேசியது பற்றி கருத்து சொல்வது உசிதமாக இருக்காது. அவர் என்ன பேசியிருந்தாலும் கட்சிதான் முடிவு செய்யும். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைப் பொறுத்தவரை இடைக்காலப் பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் அதிமுக தலைமையிலான கூட்டணிதான். அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டு வருபவர்களோடுதான் கூட்டணி.

அண்ணாமலை தன் கட்சிக்காரர்களை வேகப்படுத்துவதற்கு ஆனந்தப்படுத்துவதற்கு ஆயிரம் பேசலாம். ஆனால் ஊடகங்களிலோ வெளிப்படையாகவோ பேசினால் மட்டும்தான் நாங்கள் கருத்து சொல்ல முடியும். ஆனால் எது எப்படி இருந்தாலும் அதிமுக தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும்.

எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனித் தன்மை, அடையாளம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் வழிகாட்டுதலில் இயங்கும் இயக்கம் இது. குட்டக் குட்ட குனிபவர்கள் நாங்கள் கிடையாது. யாருக்கும் நாங்கள் குனிய மாட்டோம். யாரிடமும் குட்டு வாங்கவும் மாட்டோம்.

கூட்டணி என்பது கட்சி முடிவு செய்ய வேண்டிய விஷயம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் தலைமையை ஏற்று வருபவர்களோடு கூட்டணி அமைப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்,  ஒரு ரயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ  அப்படித்தான் கூட்டணிக்கு  அதிமுக.   ரயில் பெட்டிகளை சேர்ப்பது நீக்குவது குறித்து இன்ஜினில் இருப்பவர்தான் முடிவு செய்ய முடியும்” என்று கூறினார் ஜெயக்குமார்.

-வேந்தன்

மீண்டும் லைலா – சிம்ரன் கூட்டணி: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விராட் கோலியின் ’நாட்டு நாட்டு’: இணையத்தில் வைரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment