மத்திய அரசுடன் சுமுகமாக போய் தமிழ்நாட்டுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
இன்று மதுரை காமராஜர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்ற பெயரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டுள்ளார். அதனால் பல்கலைக் கழக இணைவேந்தரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 13) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
“இந்தியைப் புதிய கல்விக் கொள்கையில் திணிப்பதாக அமைச்சர் பொன்முடி சொல்கிறார். ஆனால், இந்தி புதிய கல்விக் கொள்கையில் திணிக்கப்படவில்லை. அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கையை ஒழுங்காகப் படிக்கவில்லை. தொடர்ந்து அவர் சொல்கிறார், இந்தி படித்தால் பானி பூரி மட்டும்தான் விற்கமுடியும் என்று.
ஒரு மாநிலத்தின் ஆளுநரை வைத்துக்கொண்டு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அநாகரிமாகப் பேசுகிறார். அவர், பேசுவது எல்லாம் அரசியல். அந்த மேடையில் கவர்னரை அவமானப்படுத்திவிட்டு, இன்று அவர் சொல்கிறார், கவர்னர் சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசுகிறார் என்று. கவர்னர் சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசுவதில் அப்படி என்ன தவறு இருக்கிறது?
தமிழகத்தில் அவர் பிஜேபியைப் பற்றியோ அல்லது அதிலுள்ள தலைவர்களைப் பற்றியோ பேசவில்லை. தமிழகத்தில் உள்ள மண் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுகிறார். அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். எல்லா இடத்திலும் மூச்சுக்கு முந்நூறு தடவை திராவிட மாடல் என திமுக சொல்லும்போது, கவர்னர் பேசியதை எப்படி அரசியலாகப் பார்க்க முடியும்? அதை குறிப்பாக, சரித்திரமாக அவர் பேசுகிறார் என்றால், அதை பாயிண்ட்டாக வைத்து டிபேட் செய்யலாம். எந்த காலக்கட்டத்தில் அது இனமாக இருந்தது, எந்த காலகட்டத்தில் அது நிலப்பரப்பாக இருந்தது, எந்த காலத்தில் அதை மரபணு ஜெனிட்டிக்ஸ் எனப் பேசினார்கள் என்பதை ஒரு டிபெட்டா பேசலாமே தவிர, கவர்னர் அரசியல் பேசுகிறார் என்று சொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அப்படியென்றால், கவர்னர் எதுவும் பேசக்கூடாதா? ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் கொடுக்கும் அனைத்து பைல்களுக்கும் ரப்பர் ஸ்டாம்பாக கையெழுத்துப் போடுவதுதான் கவர்னரா? சில கருத்துகளைப் பேசுவதில் என்ன தவறு? இதில் எந்த அரசியலை அவர்கள் கண்டுபிடித்தார்கள்?” என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை மேலும் தொடர்ந்தார்.
“அந்தந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சருக்கும் பொறுப்பு இருக்கிறது. நம் எல்.முருகனும் மத்திய அமைச்சராக இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் எந்த விழாவுக்கும் முருகன்ஜி செல்வதற்கு முழு அதிகாரம் உள்ளது. கல்வியைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பங்கு இருக்கிறது. அதிலும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு சம்பந்தப்பட்டிருக்கும்போது அமைச்சர் பொன்முடி, முருகன் எப்படி இந்த விழாவில் பங்கெடுக்க முடியும் எனக் கேட்பது நகைப்புக்குரியது.
பொன்முடியை யாரும் வரவேண்டாம் எனச் சொல்லமுடியாது. சொன்னால் அது மிகவும் தவறு. அப்படி யாரும் சொல்லவில்லை. எதற்காக இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டும்? ஆகையால் கல்வியில் அரசியல் செய்யாமல் விட்டுவிட்டு ஆளுநருடன் சுமுகமாகவும் மத்திய அரசுடன் சுமுகமாகவும் சென்று தமிழகத்துக்கு தேவையானதை வாங்குவதுதான் பொன்முடியின் கடமை” என்று கூறினார் அண்ணாமலை.
–ஜெ.பிரகாஷ்