”நான் இரவு 10 மணிக்கு மேல் மைக்கில் பேசி பிரச்சாரம் செய்திருந்தால் அந்த வீடியோவை வெளியிடச் சொல்லுங்கள்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தில் நேற்று (ஏப்ரல் 11) இரவு 10.40 மணி வரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பரப்புரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காவலர்களிடம் முறையிட்ட திமுகவினரை, பாஜகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய 4 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அநாகரீகமாக வசைபாடுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது பீளமேடு காவல்நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தஅவரிடம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது!
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி ஒரு வேட்பாளர் 10 மணிக்கு மேல் வாக்காளர்களைச் சந்திக்கக் கூடாது என்று எங்குமே கூறவில்லை.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், 10 மணிக்குப் பிறகு மக்களை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது. காரணம் ஏற்கெனவே, பிரச்சாரத்துக்காக நாங்கள் அனுமதி பெற்ற பகுதி அது.
ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், இரவு 10 மணி ஆகிவிட்டது என்பதற்காக, நாங்கள் பேசமாட்டோம் என்று கூறிவிட்டு போக முடியாது.
எங்களுடைய பிரச்சாரம் முடிவதற்கு, இரவு 12.30 முதல் 1.30 மணி வரை ஆகிவிடுகிறது. திட்டமிட்டப்படி பிரச்சாரம் செய்ய வேண்டிய இடங்களுக்கு சென்று சேர முடியவில்லை என்றால், இரவு 10 மணிக்குப் பிறகு மைக்கை அணைத்துவிட்டு, அங்கு சென்று மக்களைச் சந்தித்து கைலுக்கிவிட்டு குறைந்தபட்சம் ஒரு வணக்கமாவது சொல்லிவிட்டு வரவேண்டும். காரணம், அந்தப் பகுதியில் 3 முதல் 4 மணி நேரம் மக்கள் காத்திருக்கின்றனர்.
திமுகவின் பிரச்சாரத்துக்கு ஆட்களே வருவதில்லை. ஒரு நான்கைந்து பேர் தான் இருக்கின்றனர். அவர்களும் கலைந்து சென்று விடுகின்றனர் என்றால், அதற்கு பாஜக என்ன செய்ய முடியும்?
வீடியோ வெளியிட சொல்லுங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வரவேண்டும் என்று மக்கள் நாங்கள் போகும் பகுதியில் எல்லாம் நிற்கின்றனர். அதனால் நாள்தோறும் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டிய கடைசி மூன்று நான்கு இடங்கள் கால தாமதமாகிறது.
நாங்கள் இரவு 10 மணிக்கு பிறகு புதிய இடங்களுக்கு எங்குமே செல்லவில்லை. ஏற்கெனவே காவல் துறை அனுமதியளித்த இடங்களுக்கு மட்டுமே சென்று எங்களுக்காக 4 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்களைச் சந்தித்து, ’இரவு 10 மணிக்குள் வரமுடியவில்லை எனவே மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்பதற்காகத்தான் நேற்று ஆவாரம்பாளையம் பகுதிக்கு சென்றிருந்தோம். அப்போது காவல் துறையினரும் அங்குதான் இருந்தனர்.
பிரதமர் மோடி பல்வேறு இடங்களுக்கு இரவு 10 மணிக்குள் வர முடியாத காரணத்தால், மக்கள் முன்பு மேடையில் விழுந்து மன்னிப்புக் கேட்டதையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. மக்களின் அன்பு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாமதம் ஆவது சகஜம்தான்.
நேற்று ஆவாரம்பாளையம் பகுதியில் காவல் துறையினர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்தின் வீடியோப்பதிவு குழுவினர் என எல்லோரும் இருந்தனர். நான் இரவு 10 மணிக்கு மேல் மைக்கில் பேசி பிரச்சாரம் செய்திருந்தால் அந்த வீடியோவை அவர்களை வெளியிடச் சொல்லுங்கள்.
ஆரம்பித்தது அவர்கள்தான்!
எப்பொழுதுமே திமுகவினர் கட்டு போட்டுக்கொண்டு மருத்துவமனையில் படுப்பது சகஜம் தான். பாஜகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது. திமுகவிற்கு கோவை பாராளுமன்ற தொகுதியில் டெபாசிட் கிடைக்காது. மக்களின் கோபமும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எழுச்சியும் அனைத்துப் பக்கமும் தெரிகிறது.
காவல்துறையின் ஆதரவுடன் இருக்கும் ஆளும் கட்சி மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறுவது காதில் பூ சுற்றும் கதை. அங்கு கைகலப்பு ஏற்படுவதற்கு காரணம், பாஜகவினரை அங்கிருந்த திமுகவினர் தள்ளி விட்டுள்ளனர். ஆரம்பித்தது அவர்கள்தான். எங்கள் தொண்டர்கள் யாரையும் தாக்கவில்லை.
ஆனால், திமுகவினர் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டு இன்று காலையில் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால் அது திமுக தான்” என்று அண்ணாமலை கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவில் வாரிசு அரசியல் : ஈஸ்வரப்பா சுயேட்சையாக போட்டி!
“தமிழ்நாட்டின் கோரிக்கையை பிச்சை என்கிறார்கள்” : நெல்லையில் ராகுல் பிரச்சாரம்!
பரத் நடிக்கும் கிரைம் த்ரில்லர்… தலைப்பே வித்தியாசமா இருக்கு!