சனாதன தர்மத்தை தர்மமாக உதயநிதி ஸ்டாலின் பார்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேச எந்த தலைவர்களுக்கும் தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட சோனியா காந்தி, பிரியங்கா திமுகவை வளர்ப்பதில் தான் குறியாக உள்ளனர். மகளிர் உரிமை மாநாடு என்பது நாடகம். பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
பாஜகவை பொறுத்தவரை இந்திய அளவில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம். அந்தவகையில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் மறுபடியும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்தபோது ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இந்தியா எப்போதுமே பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பையும் மரியாதையும் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை. விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சொல்லக்கூடிய உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கூட்டணி குறித்து மேலிட தலைவர்கள் பேசுவார்கள்.
நாளை காலை அவினாசி, மாலை மேட்டுப்பாளையத்தில் 3-ஆம் கட்ட நடைபயணம் துவங்க உள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்.
சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் பேசும்போது மைக்கை ஆஃப் செய்கிறார். அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தீவிரவாததிற்கு மதச்சாயம் பூச பாஜக விரும்பவில்லை. தீவிரவாதத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்து போட மாட்டார்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷம்: உதயநிதி கண்டனம்!
சண்டே ஸ்பெஷல்: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து!