பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடுத்த ஆறு மாதத்திற்குத் திருச்சி சூர்யாவை நீக்கம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (நவம்பர் 24) உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதி தலைமையில் இன்று விசாரணை நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது, டெய்சியும் சூர்யா சிவாவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, டெய்சி சூர்யாவைத் தனது தம்பி என்றும், சூர்யா டெய்சியை தனது அக்கா என்றும் கூறினர்.
தான் பேசியது தவறு என்றால் கட்சியின் நடவடிக்கைக்குக் கட்டுப்படுவேன் என்றும் சூர்யா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்திற்கு அவரைக் கட்சியிலிருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பெண்களைத் தெய்வமாகப் போற்றும் கட்சி நமது பாரதிய ஜனதா கட்சி.
தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளைப் போல் நாமும் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளைக் கண்டும் காணாதவர்கள் போல் கடந்து செல்ல மாட்டோம்.
பெண்களை பொது மேடைகளில் கொச்சைப்படுத்துபவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள், கட்சிக் கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் போன்றவர்களின் கூடாரமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெண்களை இழிவுபடுத்துவதைப் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமுகமாக சென்று விட்டோம் என்று இருவரும் சொன்னாலும் அதைக் கட்சியின் தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன்.
நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.
ஆகவே சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவரே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.
கட்சியின் ஒரு தொண்டனாகக் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால் அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவிடம் காரம்… ஆளுநரிடம் பரிகாரம்: எடப்பாடி ராஜ்பவன் ரகசியம்!
எடப்பாடியின் பேனர் புகார்: மறுக்கும் தமிழக அரசு!
Sariyana nadavadikkai