அன்று எம்ஜிஆர் வாட்ச்- இன்று என்னுடைய வாட்ச்: அண்ணாமலையின் ‘பில்’ அரசியல்!

அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அன்னூரில் கலந்துகொண்ட ஆர்பாட்டத்தின் போது ஒரு நிருபர் அண்ணாமலையின் வாட்ச் பற்றி கேள்வி கேட்க, அதுபற்றி விரிவாக விளக்கம் அளித்து வைத்தார் அண்ணாமலை.

இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘ஆடுகளும், மாடுகளும் வைத்திருப்பதாக சொல்லும் அண்ணாமலை 5  லட்சம் விலை கொண்ட வாட்ச் கட்டுவது எப்படி?’ என்று கேள்வி எழுப்பினார். அது முதல் இந்த ரஃபேல் வாட்ச் விவகாரம் பெரும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி நேற்று (டிசம்பர் 20) மின்சார வாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,

“இந்த அரசைப் பற்றி அவதூறூகளை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடிய அந்த நபருடைய அசையும் சொத்து அசையா சொத்து எல்லாம் அவருடைய வேட்பு மனுவிலேயே இருக்கிறது. அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் கேட்பது வாங்கின கடிகாரத்துக்கு பில் இருக்கிறதா இல்லையா? உன் மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. உன் மடியில் கனம் இருப்பதால் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

நீ முதலில் நேர்மையானவராக இரு. உண்மையானவராக இரு.

வார் ரூம் மூலம் எந்த தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று பல கருத்துகள் சொல்கிறார்கள். இவ்வளவு நேர்மையான நபர் அந்த வாட்ச் எப்போது எந்த கடையில் வாங்கப்பட்டது என்று சொல்ல வேண்டும்.

முடிந்தால் இன்று சாயந்தரத்துக்குள் வெளியிட வேண்டும். அந்த வாட்ச் யாரிடமோ வெகுமதி வாங்கியது. அதனால் வெளியிட முடியவில்லை. என்றைக்காவது அது எக்செல் ஷீட்ல வரும். அப்போது அதற்கு பதில் சொல்ல நான் காத்திருக்கிறேன்”  என்று பேசினார்.

இதற்கு பதிலடியாக நேற்று (டிசம்பர் 20) திருப்பூரில் நடந்த பாஜக கூட்டத்தில் காரசாரமாக பேசினார் அண்ணாமலை.

”ஆட்சியில் இருக்கும் திமுக இந்த சாமானிய மனிதனைப் பார்த்து பில் கொடுங்க என்று கேட்கிறார்கள்.  இந்த வாட்சுக்கு பில் மட்டுமில்லை… போலீஸ் வேலையில் நான் சேர்ந்தது முதல் இன்று வரை வாங்கிய சம்பளத்தை  எல்லாம் வெளியிடப் போகிறேன்.

என்ன செலவு செய்தேன் என்று பேங்க் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் எல்லாவற்றையும் வெளியிடப் போகிறேன். பாத யாத்திரைக்கு முன் நடக்கும் பிரஸ்மீட்டில் இதற்கென்றே ஒரு வெப்சைட் போட்டு வெளியிடுவேன்.

ஆனால் இதுபோல திமுகவில் ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அந்த பிரஸ்மீட்டில் திமுகவின் முதல்வர், அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக் கணக்கை எல்லாம் வெளியிடப் போகிறோம். திமுக புள்ளிகள் இந்தோனேசியாவில் துறைமுகம் வைத்திருக்கிறார்கள்.

மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதல்வர் முதல் எம்.எல்.ஏ.வரை சொத்துக் கணக்கை வெளியிடப் போகிறேன். முதல்வர் மருமகன் கட்டக்கூடிய வாட்ச் 14 கோடி ரூபாய். முதல்வர் இதற்கு முன் என்னென்ன வாட்ச் கட்டினார்? கொஞ்சம் காரமாகவும் இருக்கும், கொஞ்சம் கசப்பாகவும் இருக்கும்.

அமைச்சர்களுக்கு சொந்தமான இன்ஜினியரிங் காலேஜ், அந்த காலேஜுடன் சேர்த்து வாங்கியிருக்கக் கூடிய 150 ஏக்கர் நிலம்,  தனியார் மருத்துவமனைகள். டி.ஆர்.பாலுவுக்கு எவ்வளவு சாராய ஆலைகள் இருக்கிறது?

திமுக எம்.ஜிஆரையும் வாட்ச்சை வைத்துதான் கிண்டல் பண்ணியது. எம்.ஜி.ஆரோடு என்னை நகக்கண் அளவுக்கு கூட ஒப்பிட முடியாது. எம்ஜிஆரின் வாட்சுக்குள் வைரம் இருக்கிறது, ஒட்டு கேட்கும் கருவிகள் இருக்கிறது என்று கூறினார்கள்.

நம்மையும் இதுபோல் திமுக இப்போது கிண்டல் செய்கிறது. நமக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது” என்று திருப்பூரில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

annamalai rafale watch bill politics

ஆனால் செந்தில்பாலாஜி தனது ட்விட்டரில் மீண்டும், “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?,

ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது” என்று நேற்று இரவு பதிவிட்டிருக்கிறார்.

annamalai rafale watch bill politics

இதற்கிடையே திமுகவின் ஐடி விங்கினர்,”எனது மனைவி என்னைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் என்று  கிறிஸ்துமஸ் விழாவில் அண்ணாமலை சொல்லியிருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2020-21 ஆண்டில் அவரது வருமானம் 7,67,020 (ஏழு லட்சத்து அறுபத்தேழாயிரம்) அவருடைய துணைவியார் வருமானம் இதன் ஏழு மடங்கு என்றால் – 53,69,140 – ஐம்பத்து மூன்று லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் இருக்க வேண்டும்.

ஆனால் அந்த அறிக்கையில் தன் துணைவியாரின் வருமானம் என அண்ணாமலை காட்டியது 15,09,430 (பதினைந்து லட்சம்தான்) அப்படியானால், இரண்டே சாத்தியங்கள்  வருமான வரித்துறைக்கு வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறாரா?  தேர்தல் ஆணையத்துக்கும் வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறாரா? அல்லது,

கிறிஸ்துமஸ் விழாவில் சொன்னது பொய். எது உண்மை? அண்ணாமலை விளக்குவாரா?” என்று புள்ளி விவரங்களோடு கேட்கிறார்கள்.

annamalai rafale watch bill politics

இப்போதே பில் கொடு என்கிறார் செந்தில்பாலாஜி. ஏப்ரலில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடும்போது ரஃபேல் வாட்சின் பில்லை வெளியிடுவேன் என்கிறார் அண்ணாமலை. கூடவே எம்.ஜி.ஆருக்கும் வாட்ச்சை வைத்து திமுக தொந்தரவு கொடுத்தது என்பதையும் நினைவூட்டுகிறார்.

இந்த நிலையில் இன்று ட்விட்டரில் உங்கள் வாட்ச் எங்கே வாங்கியது. உங்கள் வாட்சின் விலை என்ன என்ற கேள்விகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

-வேந்தன்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்

டிச. 24: திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “அன்று எம்ஜிஆர் வாட்ச்- இன்று என்னுடைய வாட்ச்: அண்ணாமலையின் ‘பில்’ அரசியல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *