தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் குறித்து திமுகவினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி அவர் தனது வாட்ச் பில்லை சமர்ப்பித்துள்ளார்.
அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்னுடைய ரஃபேல் வாட்ச் பெல் அண்ட் ரோஸ் நிறுவனத்தினுடையது. இந்த வாட்சை தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் என்பது ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த பிரெஞ்சு நிறுவனம் ஆகும்.
உலகத்தில் மொத்தம் 500 ரஃபேல் வாட்ச் மட்டுமே உள்ளது. இது 147-வது வாட்ச் ஆகும். இரண்டு வாட்ச் மட்டுமே இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளது. மும்பை எம்என்சி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரிடம் மற்றொரு ரஃபேல் வாட்ச் உள்ளது. ஒரு செங்கல்லை போல இந்த வாட்ச் கனமாக இருக்கும்.
2021-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரூ.3 லட்சத்திற்கு நான் இந்த வாட்சை வாங்கினேன். இந்த வாட்சிற்கான பில்லை எனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஃபேல் வாட்ச் பில்லும் சந்தேகங்களும்!
சேரலாதன் ராமகிருஷ்ணன் ரஃபேல் வாட்சை 2021-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி கோவையில் உள்ள சிம்சன் டைம்ஸ் பிரைவேட் லிமிடெட் கடையில் ரூ.4.50 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
சேரலாதனிடமிருந்து ரஃபேல் வாட்சை அண்ணாமலை 2021-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி ரூ.3 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
சேரலாதன் சிம்சன் டைம்ஸ் கடையில் இருந்து வாங்கிய டெலிவரி செலானையும் சேரனாதனிடமிருந்து அண்ணாமலை வாட்ச் வாங்கிய ரசீதையும் தனது என் மண் என் மக்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சேரலாதன் வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394EBI147/ 500, அண்ணாமலை சேரலாதனிடமிருந்து வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394DAR147.1 இரண்டு வாட்ச் பில் சீரியல் நம்பர்களும் வெவ்வேறாக உள்ளது.
சேரலாதன் டைம்ஸ் கடையில் இருந்து வாங்கிய வாட்ச் டெலிவரி செல்லான் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. ரூ.4.50 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் வாங்கும் போது கம்ப்யூட்டர் பிரிண்ட் டெலிவரி செல்லான் தராமல் பேனாவால் எழுதி கொடுப்பார்களா என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மொத்தமே 500 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட ரஃபேல் வாட்சை சேரலாதன் ராமகிருஷ்ணன் இரண்டு மாதங்களில் ரூ.1.50 லட்சம் குறைத்து அண்ணாமலைக்கு ஏன் விற்றார்? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
முன்னதாக அண்ணாமலை ஒரு பேட்டியில் தான் கட்டியிருக்கிற ரஃபேல் வாட்ச் 149-வது வாட்ச் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சமர்ப்பித்த பில்லில் 147-வது வாட்ச் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாட்சுக்கான தொகையை அண்ணாமலை சேரலாதனுக்கு ரொக்கமாக கொடுத்துள்ளார். வருமான வரித்துறை சட்டத்தின்படி ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக பணப்பரிவர்த்தனைகளை வங்கிகள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். இந்த நடைமுறையை மீறினால் அபராதங்கள் விதிக்கப்படும்.
மேலும் பிரதமர் மோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து கொண்டிருக்கிற வேளையில் அண்ணாமலை ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்துள்ளதையும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
செல்வம்
பணம் வசூலிப்பதே கல்லூரியின் நோக்கம்: நீதிமன்றம் அபராதம்!
பிரபல தாதாவுக்கு நேர்ந்த சோகம்: மூவர் கைது!