பால்ரஸ் குண்டு, ஆணிகளை காண்பித்து அண்ணாமலை கேள்வி!

அரசியல்

பாஜக யாருக்கும் மதச்சாயம் பூசவில்லை, மாநில அரசை வேண்டுமென்றே குறை சொல்லும் நோக்கமுமில்லை என்று  அண்ணாமலை பேசியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1998 குண்டுவெடிப்புக்கு பிறகு கோவை பின்னோக்கிச் சென்றது.

கோவை மக்கள் 10 ஆண்டுகள் போராடி அதை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் குண்டுவெடிப்போ, தற்கொலைப்படைத் தாக்குதலோ நடந்திருந்தால், கோவை 20 வருடம் பின்னோக்கி சென்றிருக்கும்.

இந்த விபத்து நடந்த பிறகு, அது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று தெரிந்தபிறகு, துரிதமாக செயல்பட்டு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் கோவை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன். சில சதிகாரர்கள் மதத்தால் பிளவுப்படுத்த நினைத்தால் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.

தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி மதத்தை வைத்து தமிழகம் முழுவதும் ஒற்றுமையை சீர்குலைக்கவேண்டும் என்பதே சிலரது நோக்கம். நாங்கள் மதத்தால் யாருக்கும் சாயம் பூசவில்லை, தவறு செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் சொல்லி வருகிறோம்.

சனாதன தர்மத்தின் கொள்கையே எந்த மனிதரையும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது என்பது தான். கோவை மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அரசுக்கு சில கேள்விகள் வைத்திருக்கிறோம். அது அரசு நன்றாக செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில் தானே தவிர, அரசை குறை சொல்லும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.

முதலமைச்சருக்கு ஆக்கபூர்வமான கருத்துகளை சொல்லுவது பாஜகவின் கடமை. கோவையில் நடந்ததை சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது என்றார்.

அப்போது தனது சட்டை பாக்கெட்டில் இருந்த பால்ரஸ் குண்டு, ஆணிகளை காண்பித்த அண்ணாமலை, “மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற பொருட்களே சாட்சி.

அதனால் தான் காவல்துறையிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகிறோம். மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு மாறி மாறி குற்றம் சொல்லி பயனில்லை. எனவே முன்கூட்டியே அதை சரிசெய்யவேண்டியது காவல்துறையின் கடமை.

ஜூன் 19 ஆம் தேதியே தீவிரவாத சதித்திட்டம் குறித்து எச்சரித்தும் கூட கவனக்குறைவால் இது நடந்திருக்கிறது. ஆனால் இன்னமும் இதை சிலிண்டர் விபத்து என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது“ என்றார்.

கலை.ரா

கோவையில் அண்ணாமலை : நிகழ்ச்சியில் பங்கேற்காத முக்கிய நிர்வாகிகள்!

குஜராத் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *