தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தூர்வாராத சாத்தனூர் அணைதான் காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ‘ஃபெஞ்சல்’ புயலால் கடந்த சில தினங்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையில், அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், வேலூர், கடலூர் என பல மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை இன்று (டிசம்பர் 3) அண்ணாமலை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் மரக்காணம் உப்பளம் பகுதியை பார்வையிட்டோம். விவசாய நிலம், இறால் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம்.
இந்த வெள்ளத்துக்கு முக்கிய காரணமாக வரலாறு காணாத மழை என்று மாநில அரசு சொல்கிறது. அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது.
ஆனால் மாநில அரசாங்கம் வெள்ள நீர் வடிவதற்கான கால்வாய்களை சரியாக தூர் வாரவில்லை. இந்த முறை வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் சாத்தனூர் அணை திறப்பு. இதை மனிதன் உருவாக்கிய பேரிடர் என்றுகூட சொல்லலாம்.
சாத்தனூர் அணைக்கு டிசம்பர் 1 காலை 5000 கன அடி தண்ணீர் வந்துள்ளது. அன்று மாலை 30,000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்படும் என்று மாநில அரசு கூறியது.
டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது
பத்திரிகை நண்பர்களுக்கு டிசம்பர் 2 அதிகாலை 2 மணிக்குத்தான் மாநில அரசாங்கம் செய்தியை தெரிவித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் எப்படி தப்பிக்க முடியும்?
கிட்டத்தட்ட 38 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாட்டுக்கு இடையேயான தொடர்பே கட் ஆகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மழைகாலத்துக்கு முன்பு தூர்வாராத கால்வாய்கள் மற்றும் ஒரே நேரத்தில் சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவில் திறக்கப்பட்ட தண்ணீர்.
மே மாதம் 2023 ஆண்டு தமிழ்நாடு பொதுப்பணி துறை 4 அணைகளில் தூர் வார வேண்டும் என்று கூறியது. அதில் சாத்தனூர் மற்றும் அமராவதி அணைகளும் அடங்கும்.
சாத்தனூர் அணையில் 119 அடி கொள்ளளவு இருந்தாலும் கூட அதன் அடிமட்டத்தில் 20 அடிக்கு சேறு உள்ளது. மாநில அரசு இதை கண்டுகொள்ளவே இல்லை.
ஆனால் சென்னையை மட்டும் மக்களுக்கு காட்டி, தண்ணீர் வரலனு சொல்றாங்க. சென்னையில் பெய்தது 12 செ.மீட்டரை விட குறைவு.
அரசு அதிகாரிகள் கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்க்க வருவதில்லை. நகரங்களை நோக்கித்தான் செல்கிறார்கள்.
ஆனால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று மாநில அரசு பழி போடுகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்கி வருகிறது.
நாங்கள்(பாஜக) கேட்பது ஒன்று தான், 3 லட்சம் கோடிக்கு பட்ஜட் போடும் தமிழக அரசுக்கு மழைநீர் வடிகால்களை தூர்வாருவதில் என்ன பிரச்சினை? இது சரி செய்யப்படாவிட்டால், அடுத்த ஆண்டும் இது போல் நிகழ்வு ஏற்படும்.
நாளை நான் டெல்லிக்கு சென்று வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை மத்திய அமைச்சர்களுக்கு தெரியபடுத்தவுள்ளேன்” என்றார்.
மேலும் “மாநில அரசு ஐந்து முறை எச்சரிக்கை கொடுத்தோம் என்று சொல்கிறது. ஆனால் அதை மக்களிடம் சொன்னீர்களா, கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மக்களுக்கு சொன்னார்களா?
துறைக்குள்ளேயே காகிதம் மூலமாக கொடுப்பது அலர்ட் அல்ல” என்றார் அண்ணாமலை.
சாத்தனூர் அணையின் அடிமட்டத்தில் 20 அடிக்கு சேறு இருக்கிறது என்பதை மின்னம்பலத்தில் நாம் புரண்டு படுத்த தென்பெண்ணை… பொங்கி வழியும் சாத்தனூர் அணை… நள்ளிரவில் நடந்தது என்ன? நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதை தான் அண்ணாமலை சுட்டிகாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வெள்ள பாதிப்பு : நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா?
கும்பமேளா: 5 நட்சத்திர டெண்டில் தங்க ஒரு நாள் ரேட் எவ்வளவு தெரியுமா?