புத்தாண்டு பிறக்கும் தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் வழக்கம்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புத்தாண்டு பிறக்கும் தினமான இன்று (ஜனவரி 1) கேரளாவில் இருக்கும் அமிர்தானந்த மயி ஆசிரமத்துக்கு அமைதியைத் தேடிச் சென்றிருக்கிறார்.
நேற்று (டிசம்பர் 31) டிஜிட்டல் திண்ணையில், ‘மாநிலத் தலைவர் ஆவேன் -சபதமிட்டு டெல்லி சென்ற தமிழிசை… அமைதியைத் தேடிச் சென்ற அண்ணாமலை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்,
அதில், “அண்ணாமலை சமீப காலமாக மன உளைச்சலில் இருக்கிறார். இப்போது கூட அவர் கேரளாவில் அமிர்தானந்த மயி ஆசிரமத்துக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்’ என்று அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் கூறியதை பதிவு செய்திருந்தோம்.
அதன்படியே அண்ணாமலை இன்று (ஜனவரி 1) கேரளாவில் இருக்கும் அமிர்தபுரி எனப்படும் அமிர்தானந்த மயி ஆசிரமத்துக்கு சென்று மாதா அமிர்தானந்தமயியை சந்தித்து ஆசி பெற்றார்.
இதுகுறித்து தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அண்ணாமலை,
“சில நேரங்களில் நமக்குத் தேவையான ஒரே விஷயம் ஒரு அரவணைப்புதான்.
’நம் அனைவரின் மீதும் கருணை மற்றும் அன்பின் மூலம் நமது உலகத்தை சிறந்த இடமாக மாற்றியதற்காக மாதா அமிர்தானந்தமயி அம்மாவை நான் மரியாதையுடன் வணங்குகிறேன்!
2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான, வளமான மற்றும் நிறைவான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்… அமிர்தபுரியில் இருக்கும் அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் இருக்கும் மாணவர்களோடும் உரையாடினார் அண்ணாமலை.,
நேற்று மாலை தன்னிடம் பேசியவர்களிடம், ‘மனசு சரியில்லைண்ணா… அதான் அம்மாவை பாக்க போயிட்டிருக்கேன்’ என்று சொல்லிச் சென்றிருக்கிறார் அண்ணாமலை.
”அவருக்கு மன உளைச்சலின் போது, கடினமான தருணங்களின்போது மாதா அமிர்தானந்தமயியை சந்தித்து அவரது ஆசியையும் அரவணைப்பையும் பெறுவார். 2022 இல் கூட இதுபோலச் சென்றார்” என்கிறார்கள் அண்ணாமலையை அறிந்தவர்கள்.
–வேந்தன்