வைபை ஆன் செய்ததும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனின் பிரஸ்மீட் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது.
“மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரான இ வி கே எஸ் இளங்கோவனுக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனக்கு ஆதரவு கேட்டு கமல்ஹாசனை இளங்கோவன் சந்தித்திருந்த நிலையில் இன்று (ஜனவரி 25) காலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் முடிந்து தனது நிபந்தனையற்ற ஆதரவை இளங்கோவனுக்கு அறிவித்தார் கமல்ஹாசன்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அதனால் மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக கட்சி பேதங்களை கடந்து இளங்கோவனை ஆதரிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் வரும் நாடாளுமன்ற கூட்டணிக்கு, இந்த கூட்டணி அச்சாரமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “இது இந்த நிலைக்கு எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் வந்த பிறகு அப்போது முடிவெடுப்போம்’ என கூறியிருக்கிறார் கமல்.
மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது ஏன் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகக் கூடாதா என்று சிரித்துக் கொண்டே பிரஸ்மீட்டை முடித்தார்.
கமல்ஹாசனின் இந்த முடிவு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் கமல்ஹாசன் சினிமா ரீதியாக நெருக்கத்தோடு இருந்து வந்தார் இந்த சினிமா நெருக்கம் அரசியல் நெருக்கமாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று அப்போதே மக்கள் நீதி மையத்தில் முணுமுணுத்தார்கள்.
அதேபோல தனது தந்தையும் திமுக தலைவருமான ஸ்டாலின் குறிப்பிட்ட சில விஷயங்களை கமல்ஹாசனிடம் தெரியப்படுத்தி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கு இடையே இந்திய ஒற்றுமை யாத்திரை நடந்த ராகுல் காந்தி தனது பயணத்தில் கமல்ஹாசனும் பங்கேற்க வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று டெல்லி சென்ற கமல்ஹாசன் ராகுல் காந்தியோடு பாதயாத்திரையில் பங்கேற்று தமிழ்நாடு அரசியல், இந்திய அரசியல் தொடர்பாக ராகுல் காந்தியோடு ஒரு நீண்ட உரையாடலையும் நிகழ்த்தினார்.
அதை ராகுல் காந்தி பதிவு செய்து தனது youtube பக்கத்தில் வெளியிட்டு கமல்ஹாசனை கௌரவப்படுத்தினார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்காத காலத்திலேயே… திமுக தலைவர் ஸ்டாலின் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனை தனது கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றி உறுதியாக இருந்துள்ளார்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினுடன் உரையாடிய அமைச்சரும் பொதுச் செயலாளாருமான துரைமுருகன், ’வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம். ஆறு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கிறார்கள். நாம் இரண்டு மக்களவைத் தொகுதி கொடுத்து முடித்து விடலாம்.
வட மாவட்டங்களில் நமக்கு பலமாக இருக்கும்’ என்று ஸ்டாலினுக்கு யோசனை தெரிவித்துள்ளார். அதில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார் ஸ்டாலின். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் ஸ்டாலினிடம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கி விடக்கூடாது என்று ஒரு கட்டத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறு தன்னிடம் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில்… இப்போது உள்ள கூட்டணி அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிற ஸ்டாலின்… தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஐஜேகே கட்சிக்கு பதிலாக மக்கள் நீதி மையத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் கமல்ஹாசனுக்கு இருக்கும் ஆதரவு, மோடி எதிர்ப்பில் கமல்ஹாசனின் நட்சத்திரத் தன்மை ஆகியவை திமுக கூட்டணிக்கு உதவும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
பாரிவேந்தர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் சில மாதங்களிலேயே அவர் திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கினார்.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியை கமல்ஹாசனுக்கு கொடுப்பது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே உதயநிதியுடன் விவாதித்துள்ளார்.
இவ்வளவு பின்னணிகளுக்கு இடையே தான் இன்று கமல்ஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான இளங்கோவனுக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட சேர்ந்து விட்டார் கமல்ஹாசன். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசுவதற்கும் தயாராகிவிட்டார் கமல்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
எடப்பாடிக்கு அதிர்ச்சி தந்த அண்ணாமலை
இதையடுத்து மெசஞ்சர் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.” இடைத் தேர்தல் நிலவரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தரப்பில் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்று தெரிவித்திருந்த நிலையில் அவரது பிரஸ் மீட்டில் சொன்னதற்கு மாறாக சில உள் மூவ்களை பாஜக தொடங்கிவிட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடலாமா, அதிமுகவுக்கு உள்ள பலம் என்ன? திமுக கூட்டணி எப்படி இருக்கிறது என்பது பற்றியெல்லாம் அண்ணாமலை 15 நபர்களை நியமித்து பிரத்தியேக சர்வே ஒன்றை கடந்த வாரம் அந்த தொகுதியில் நடத்தினார்.
அவர் கரூரில் இருந்த பொழுது அந்த சர்வே முடிவுகள் அண்ணாமலையிடம் அளிக்கப்பட்டன. அதன்படி பாஜக தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அதிமுக குறிப்பாக எடப்பாடி தரப்பினர் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து தனக்கு நம்பகமான தமிழக பாஜக பொதுச் செயலாளரும், டெல்லி தலைவர்களோடு நன்கு அறிமுகமானவருமான ஏ. பி. முருகானந்தத்தை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடியோடு இனி கூட்டணி சேர்ந்தாலும் அவர் பாஜகவை வளரவிடமாட்டார் என்பதே அண்ணாமலையின் சர்வே சொல்லும் செய்தி.
ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை எடுத்துச் சொல்லி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று பாஜக சார்பில் அங்கே போட்டியிட்டால் கட்சியை பலப்படுத்த முடியும் என்பதுதான் அண்ணாமலையின் தற்போதைய மூவ்.
இது குறித்து டெல்லி தலைவர்களை கன்வின்ஸ் செய்வதற்காகத்தான் முருகானந்தத்தை அனுப்பி இருக்கிறார் அண்ணாமலை. ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக முருகானந்தமே போட்டியிட்டாலும் ஆச்சரியம் இல்லை என்றும் சொல்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்” என்று மெசஞ்சர் சென்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது.
ஐசிசி தரவரிசை : முதன்முறையாக சாதனை படைத்த முகமது சிராஜ்!
என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுக : அன்புமணி கடிதம்