அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று (மார்ச் 7) முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
பாஜகவிலிருந்த சி.டி.நிர்மல் குமார், திலீப் கண்ணன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் அதிமுகவுக்கும் , பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் கோவில்பட்டியில் இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தார்கள்.
இவ்வாறு இருகட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், தேனி பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரை அண்ணாமலை சந்தித்தார்.
ஓபிஎஸின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலமானார். எனவே, பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளார். அங்கு பழனியம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பாஜக இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் நடைபெற்ற அண்ணாமலை ஓபிஎஸ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
எடப்பாடியின் உருவப்படம் எரிப்பு: பாஜகவினர் கைது!
பெண்களுக்கு ரூ.1000: மகளிர் தின வாழ்த்து செய்தியில் அறிவித்த முதல்வர்