எடப்பாடியை சந்தித்த அண்ணாமலை: அடுத்து பன்னீர்…சமரச திட்டமா?

அரசியல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தங்களது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி தங்களது ஆதரவை அளித்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு தனது ஆதரவை அளித்துள்ளார்.

annamalai meets edappadi palanisamy

பாஜக ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சி தலைவர் அண்ணாமலை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ஈரோட்டில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி படத்துடன் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது.

பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம்பெறாமல் இருந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதா என்ற கேள்வி எழுந்தது.

அன்று மாலையே பேனர் மாற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னை அதிமுக பொதுச்செயாளராக அங்கீகரிக்க கோரியும்,

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக நேற்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும்,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தான் முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று மின்னம்பலம் இணையதளத்தில் வெளியான ஆழம் பார்த்த எடப்பாடி – அமைதி காக்கும் அண்ணாமலை – படபடக்கும் பன்னீர்: கூட்டணி கடமுடா என்ற கட்டுரையில்,

பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவு தினைத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை வருகிறார். அப்போது அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பார் என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி இன்று காலை எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக பொறுப்பாளர் சிடி ரவியுடன் சென்று சந்தித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்பு சென்னை கிராண்ட் பிளாசாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணாமலை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பானது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

சென்னை ஏடிஎம்மில் ரூ.200-க்கு பதிலாக ரூ.500 வந்த விநோதம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.