பாஜக தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ், ஈபிஎஸை இன்று காலை சந்தித்த நிலையில் பாஜகவுடன் எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்று எடப்பாடி ஆதரவாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் டெல்லி சென்று வந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்தார்.
அரசியல் வட்டாரத்தில் அண்ணாமலையின் சந்திப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தமிழக பாஜக ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவிக்குமா, அல்லது ஈபிஎஸுக்கு ஆதரவு தெரிவிக்குமா, இல்லை ஈரோடு கிழக்கில் தனித்து களம் காண்கிறதா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அண்ணாமலை சந்தித்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான பொன்னையனிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், “ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ளார்கள். தேர்தல் ஆணையத்துக்குச் சட்ட ரீதியாக சில கடமைகள் உண்டு.
ஒரு அரசியல் கட்சியில் பிரச்சினை என்றால் அதைச் சட்ட ரீதியாக கண்காணிக்க வேண்டியது நீதிமன்றம் அல்ல. தேர்தல் ஆணையம் தான்.
அதிமுக பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஆழமாகப் பார்த்து சட்டத்துக்கு உட்பட்டு, அந்த கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை.
தற்போது தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் போட்டிருக்கிற மனு சட்டத்திற்குப் புறம்பானது. அதை நீதிமன்றம் சரி செய்யும். எடப்பாடிக்கு ஆதரவாக எல்லாமே நடக்கும்.
பாஜக வட மாநிலங்களில் எப்படிப்பட்ட செயல்களை செய்தது என மக்களுக்குத் தெரியும். அங்கு பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்குத் தெரியும்.
பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துத் தான் போட்டியிட்டது.
மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் பாஜக எங்கள் பக்கம் இருக்கலாம் அல்லவா?. திமுக நீங்கலாக மற்றவர்கள் எங்களுடன் இருந்தால் வரவேற்கத்தான் செய்வோம்.
ஓபிஎஸுக்கு கட்சியே இல்லை, சுயேச்சையாக நின்று யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஓபிஎஸ் தரப்பு ஒரு செல்லாத காசு” என்று விமர்சித்தார்.
பிரியா
ஆதி திராவிடர்களின் உரிமையும், அண்ணாவின் கட்டளையும்!
அண்ணா நினைவு தினம்: மரியாதை செலுத்திய ஸ்டாலின்
நீங்களாக என்பது தவறு. நீங்கலாக என்பதே சரி.