டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- கேசவ விநாயகம் மோதல் எதிரொலி: தமிழக பாஜகவில் திடீர் மாற்றம்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது. “தமிழக பாஜகவில் வீசிய ஆடியோ புயலைத் தொடர்ந்து  ஒரு முக்கியமான மாற்றம் நடக்கப் போகிறது. ஆர்.எஸ்.எஸ்.சுக்குள் சோர்ஸ் இருந்தால் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்” என்றது அந்த குரல் பதிவு.

அதைக் கேட்டுக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய வாட்ஸ் அப்,   தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஆர்.எஸ்.எஸ். தனது சங் பரிவார குழந்தைகளான அனைத்து அமைப்புகளையும் இணைத்து ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தும். ஆர்.எஸ்.எஸ்.சின் பல குழந்தைகளில் அரசியல் குழந்தைதான் பாஜக.

இந்த வகையிலான இரு நாட்கள் ஆய்வுக் கூட்டம் கடந்த நவம்பர் 26, 27 தேதிகளில் சென்னை அண்ணாநகரில்  ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.. அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, தென் பாரத தலைவர் வன்னியராஜன், மற்றும் தமிழக ஆர்.எஸ்.எஸ், நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

தமிழக பாஜகவில் இருந்து மூத்த ஆர்.எஸ்.எஸ். ஊழியரான ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தேசிய பாஜக மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன்,  தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த ஒரு வருடத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் பரிவாரங்கள் சந்தித்த சவால்கள் என்ன, சாதித்தது என்ன என்பது பற்றி இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த வருடத்தில் நாம் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்.சின் தேசிய இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, ’ஆர்.எஸ்.எஸ்.சின் குழந்தைகளான அமைப்புகள் எல்லாம் அவையவை தனித்து சொந்தக் காலில் நின்று சாதிக்க வேண்டும் என்பதைத்தான் தாய் விரும்புகிறது.

பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் பாஜக தேர்தல் வெற்றி ரீதியாக சாதிக்க வேண்டும். அந்த அரசியல் வெற்றியை நாம் அடைந்துவிட்டால், மற்ற குழந்தைகள் எல்லாம்  வலுவடையும். கர்நாடகத்தில் இதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.

எனவே நம் முன் உள்ள சவால் தமிழகத்தில் பாஜக அரசியல் வெற்றியை அடைய வேண்டும்.  அதற்காக நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார் மன் மோகன் வைத்யா.

Annamalai Kesava Vinayakan clash change in Tamil Nadu BJP

இந்த ஆய்வுக் கூட்டத்தின்  ஒரு பகுதியாக தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார் மன் மோகன் வைத்யா.

’அரசியல் ரீதியாக நாம் முன்னேற வாய்ப்புள்ள மாநிலமான தமிழ்நாட்டில் நாமே நம் பெயரை கெடுத்துக் கொள்கிறோம்.  ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனி மனித ஒழுக்கத்துக்கு பெயர் பெற்றது.

ஆனால் தமிழகத்தில் பாஜகவில் நடக்கும் சம்பவங்கள்  தமிழக பெண்களிடையே நமக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. தனி நபர்களை மையப்படுத்தி நடக்கும் இந்த விவகாரங்கள் பாஜகவின் வளர்ச்சியில் பெரும் தடைகளாக இருக்கின்றன.

மோடி தமிழகத்துக்கு வந்து செல்லும் போதெல்லாம் பெருமை கொள்கிறார். காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறார். ஆனால் இங்கே பாஜகவில்  கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் கட்சிக்கு தேக்கம்தான் ஏற்படும். இதைக் களைய வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார் மன்மோகன் வைத்யா.

சில நாட்களுக்கு முன்  திருச்சி சூர்யா- டெய்சி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பானது.  அந்த ஆடியோவில் டெய்சியைப் பார்த்து, ‘கேசவ விநாயகம் மூலமாக பதவிக்கு வந்தவதானே நீ?’ என்று மிக ஆபாசமாக கேட்பதும் இடம்பெற்றிருந்தது.

கேசவ விநாயகம் தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளராக இருக்கிறார். 
பாஜகவில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அமைப்புப் பொதுச் செயலாளர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களாகவே இருப்பார்கள்.

மாநில பாஜக தலைவருக்கு அரசியல் ரீதியாக அதிகாரம்  இருந்தாலும், நிர்வாக ரீதியான அதிகாரம் அமைப்புப் பொதுச் செயலாளரிடம் இருக்கும்.

ஆனால் சமீப காலமாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கும் இடையே சில நெருடல்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன.

Annamalai Kesava Vinayakan clash change in Tamil Nadu BJP

அரசியல் ரீதியாக சில நியமனங்கள், மாற்றங்களில் கேசவ விநாயகம் தலையிட்டிருக்கிறார். சென்னை அருகே ஒரு மண்டல தலைவரை மாற்ற அண்ணாமலை ஆணையிட்டபோது, அதை கரு. நாகராஜனிடம் சொல்லி தடுத்திருக்கிறார் கேசவ விநாயகம்.

மேலும் பாஜகவுடைய அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் கேசவ விநாயகம் தலையீடு அதிகம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் புலம்பினார்கள்.

அந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அண்ணாமலைக்கு நெருக்கமான திருச்சி சூர்யா, டெய்சியிடம் பேசும்போது, ‘நீ கேசவ விநாயகம் மூலமாக பதவிக்கு வந்தவதானே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழக பாஜகவுக்குள் நிலவும்  பாலியல் விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியிருக்கிறது.

இதன் விளைவாக இப்போது தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகத்தை மாற்ற முடிவெடுத்து கட்சியின் தேசியத்  தலைமைக்கு பரிந்துரை செய்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

கேசவ விநாயகம் இடத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து ஒருவரைதான் நியமிக்க வேண்டும். அந்தவகையில் தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் பதவிக்கு தமிழக ஆர்.எஸ்.எஸ். சின் ’முக்கிய பிரமுகர்’ ஆன ரவிக்குமாரை நியமிக்க பரிந்துரை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். 

ரவிக்குமார் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச்  சேர்ந்தவர். இவர்,  இவரது சகோதரர்கள் இருவர் என மூவரும் ஆர்.எஸ்.எஸ்.சின் முழு நேர ஊழியர்கள். அவர்களில் ஒரு சகோதரர் கொரோனா காலத்தில் சேவை செய்யும்போது கொரோனா தாக்கி இறந்துவிட்டார்.

அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்.சுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ரவிக்குமாரை தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளார் ஆக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆர்,எஸ்.எஸ், வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது டெல்லி தொடர்புகள் மூலம் இதை தடுப்பதற்கு வலிமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் கேசவ விநாயகம் என்கிறார்கள் கமாலாலய  வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

சர்ச்சையில் லைகர் : அமலாக்கத்துறை முன்பு பிரபல நடிகர் ஆஜர்!

திமுக கவுன்சிலர் கடத்தியது கோகைன் போதைப்பொருளா? – கடலோர பாதுகாப்பு குழுமம் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share