ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது திமுக : அண்ணாமலை

அரசியல்

“தினமும் ஆளுநரை வைத்து திமுக அரசியல் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது” என மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஏதோ விளம்பரத்தில் நடித்தோம் என்றில்லாமல், செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதன்மைப்படுத்த வேண்டியது நம் முதல்வரின் கடமை. செஸ்ஸில் சாதித்த மிகப்பெரிய ஆளுமைகள் நம் தமிழ் மண்ணில் உள்ளனர். அவர்களை எல்லாம் பெருமைப்படுத்தி செஸ் ஒலிம்பியாட்டுக்கு முதல்வர் மரியாதை தர வேண்டும்.

அதிமுகவின் உட்கட்சி விவாகாரத்தைப் பொறுத்தவரை பிஜேபியின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. எப்போதுமே இன்னொரு உட்கட்சியின் விவகாரத்துக்குள் பிஜேபி போகாது. ஏனெனில், வாஜ்பாய் காலத்தில் நம்முடைய கட்சி 40 கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்தது. அந்த சமயத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி 70 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது. அதில் நிறைய கட்சிகளுக்கு உட்கட்சி பிரச்சினை இருந்தது. அவர்களாகவே அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்தனர்.

எங்கேயும் பிஜேபி விருப்பு வெறுப்பை உள்ளே அனுப்பவில்லை. என்னைப் பொறுத்தவரை பிஜேபிக்கும் அதிமுகவும் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது, தொடர்ந்துகொண்டிருக்கிறது. நம் கூட்டணியில் ஓர் அங்கமாக அவர்கள் இருக்கிறார்கள். அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என அந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். அது, எதுவாக இருந்தாலும் பிஜேபி ஏற்றுக்கொள்ளும்.

அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் நம் நட்பு என்பது, அனைத்து தலைவர்களுடனும் இருக்கிறது. ஆக, தனிப்பட்ட முறையில் அதிமுக தலைவர்களுடன் நட்புடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் அதிமுகவின் உட்கட்சி முடிவு என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மட்டுமே இருக்கிறது. அதற்கு பிஜேபி எப்போதும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கும். அரிசி சம்பந்தப்பட்ட ஜி.எஸ்.டியில் அரசியலைக் கலக்க வேண்டாம். அதேநேரத்தில் இதில் பிரச்சினை இருக்குமென்றால், பிஜேபி அதைச் சரிசெய்யும் என தெளிவுப்படுத்துகிறேன்.
பொங்கல் தொகுப்பு ஊழல் சி.பி.ஐக்கு செல்ல வேண்டும். இதில் மாநில அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். அனைத்துவிதமான அதிகாரிகள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல திமுகவில் இருக்கும் சில நண்பர்களுக்கு, ஆளுநரைத் திட்டாவிட்டால் தூக்கம்வராது. காலை முதல் மாலை வரை ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பதுதான் திமுகவினரின் முழுநேர வேலையாக இருக்கிறது. மக்களுக்கு ஒரு வருடத்தைக் கழித்த திமுக அரசின்மீது சலிப்பு வந்திருக்கிறது. அதிலிருந்து மக்கள் மனதை மாற்ற வேண்டும். அதற்காக, தினமும் ஆளுநரைவைத்து திமுக அரசியல் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. கி.வீரமணிக்கு உண்மையிலேயே சட்டத் திட்டங்கள் தெரியுமா என சந்தேகமாய் இருக்கிறது. காரணம், பெரியார் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம்தான் வினாத்தாளை தயார் செய்திருக்கிறது.


பெரியார் பல்கலைக்கழகம் டாப் 38 இடங்களுக்குள் வந்திருப்பது நம் திராவிட மாடலுக்கு கிடைத்த பெருமை என்று சொல்லும் முதல்வர், அதே பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி தொடர்பான வினாத்தாள் தவறு நடந்ததற்கும் அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் அல்லவா? அதை ஏன் முதல்வர் சொல்லவில்லை? தரவரிசை உயரும்போது பெருமைப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், அங்கே தவறு வரும்போது காவியைக் காரணம் காட்டுகிறார்கள்.
அதே வினாத்தாளில் 10வது கேள்வியில் பெரியாரைப் பற்றிக் கேட்கிறீர்கள். அடுத்த கேள்வி சாதியைப் பற்றி இருக்கிறது. இதனால் திமுகவின் ஐடியாலஜி, கருத்தாழம் சாயம் வெளுத்துவிட்டது. இதைத்தான் திமுக செய்துகொண்டிருக்கிறது. 10 மற்றும் 11வது கேள்விதான் திமுகவின் பிளாசபி. ஒரு கையில் பெரியாரையும் மறுகையில் சாதியையும் பிடித்திருக்கிறார்கள். இதைவைத்து 70 ஆண்டுகளாக அரசியல் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஆக, சாதி தொடர்பான வினாத்தாள் சர்ச்சைக்கு முதல்வருக்குத்தான் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு அல்ல.
அந்த வினாத்தாளைத் தயார்செய்த புரொபஸரை நீக்கம் செய்யச்சொல்லி முதல்வரிடம் சொல்லுங்கள். நான் எங்கும் திமுகவினரை வசைபாடவில்லை. திமுகவினர்தான் என்னை வசைபாடுகின்றனர். என் கை, கால்களை உடைத்துவிடுவேன் என அவர்கள்தான் வசைபாடுகின்றனர். அதேநேரத்தில், அவர்கள் நம் மத்திய அரசின் திட்டங்களில் பொய்யைச் சொல்லி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து நாங்கள் கேள்வி கேட்கிறோம். அதுசம்பந்தமாக மக்கள் மன்றத்துக்கு கொண்டுவருகிறோம். ஆனால் எங்களுக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பகையும் கிடையாது” என்றார்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *