கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை மற்றும் தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு பதிலடியாக தமிழக காவல் துறை, அண்ணாமலை அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கூறி வருகிறார் என விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி நேற்று (அக்டோபர் 30 ) பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கோவை சம்பவத்தில் எந்தவித அடிப்படை அறிவும் இன்றி கோவையை பதற்றமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து வரும் தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் கோவைக்கு வருகின்றன.
பெருமைமிகு கன்னடன்
பெங்களூரில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது எனக்கூறி PayCM ஆக கர்நாடக முதல்வர் இருக்கிறார் என தொழில் துறையினர் இடம்பெயர்கின்றனர். பெருமைமிகு கன்னடன் எனக்கூறி அண்ணாமலை, இந்த நிறுவனங்களை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கோவை பதற்றமாக உள்ளது , இங்கு வந்தால் தொழில் செய்ய முடியாது என மீண்டும் மீண்டும் அண்ணாமலை கூறி வருகிறார்.
பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக
ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக இருந்தால் உரிய ஆதாரங்கள் அல்லது சரியான தகவல்கள் இருந்தால் அண்ணாமலை மாநில அரசு அல்லது மத்திய அரசுக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை. தற்போது கோவை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்து 3 நாட்கள் ஆகி உள்ளது.
இந்நிலையில் வழக்கின் ஆதாரங்களை ஒப்படைக்கும்படி என்ஐஏ சார்பில் தமிழக போலீசாரிடம் கேட்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் எந்த கடிதமும் எழுதவில்லை. இருப்பினும் தமிழக பாஜக சமூக பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் செய்ய துடித்து வருகிறது.
கடமையைச் செய்யாத அண்ணாமலை
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டில் இறந்தார். இதனை பாஜகவை சேர்ந்த ஒருவர் பயங்கரவாத தாக்குதல் என கூறினார். அப்போது அண்ணாமலை கண்டிக்கவில்லை. சரியாக இருக்குமோ என பாஜக தலைவர்கள் பேசவில்லை.
முப்படையின் தளபதி என்பது ஏறத்தாழ குடியரசு தலைவருக்கு நிகரான பதவி. அவர் இறந்த நிலையிலும் கூட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார்.ஆனால் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஊட்டி சென்று இறுதி சடங்கில் கலந்துகொண்டு உடலை டெல்லிக்கு அனுப்பினார். இது எங்களின் கடமை. ஆனாலும் கடமையை செய்யாத அண்ணாமலை உள்நோக்கத்துடன் பேசி வருகிறார்.
புல்வாமா தாக்குதல் பற்றி வாய் திறக்காத மோடி, அமித்ஷா
புல்வாமா தாக்குதல் நடந்தது. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் இதுபற்றி ஏதாவது பேசினார்களா?. பேசவில்லை. ஏனென்றால் அதுபற்றி அவர்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை.
18 ம் தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் முபின் பெயர் இருப்பதாக அண்ணாமலை கூறினார். அப்படியொரு அறிக்கை தமிழக அரசுக்கு வரவில்லை. இந்த விஷயத்தில் முழுபூசணிக்காயை அண்ணாமலை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.
அசம்பாவிதம் இல்லாத தமிழ்நாடு
மத்திய அரசிடம் இருந்து வந்த அறிக்கை என்பது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் இங்குள்ள இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பை கூட்டுங்கள் என்று மட்டும் தான் கூறப்பட்டு இருந்தது. அது ஒன்றும் ராணுவ ரகசியமான அறிக்கை அல்ல.
மாதம்மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் அறிக்கை போன்றது தான் அது. தமிழ்நாட்டில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து கூட்டாக செயல்பட்டு மக்களிடம் அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். மக்களிடம் பதற்றம் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அண்ணாமலை பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அரசியல் நோக்கம்
தமிழ்நாட்டு அரசியலுக்கு வர வேண்டும் என அண்ணாமலைக்கு முன்கூட்டியே நோக்கம் இருந்தது.
ஒன்றரை ஆண்டில் தமிழக பாஜக தலைவராக உள்ளார். பாஜகவின் ராகவன் என்பவரை பத்திரிகையாளர் ஒருவரை வைத்து காலி செய்தார். இப்போது வானதி சீனிவாசன் உள்ளிட்டோரை காலி செய்ய வேலைகள் நடப்பதாக நான் பார்க்கிறேன். சொந்த கட்சியில் பந்த் அறிவிக்கப்பட்டதே அண்ணாமலைக்கு தெரியவில்லை. முதலில் அவர் சொந்த கட்சியில் உள்ள பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்” என்று ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உக்ரைனுக்கு ஆதரவாக புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் வாசகம்!
கிச்சன் கீர்த்தனா : கோதுமை ஓமப்பொடி!