”நடிகர் சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர் அண்ணாமலை தான்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அரசியல்

நடிகர் சிவாஜி கணேசனை விட மிகப்பெரிய நடிகர் பாஜக தலைவர் அண்ணாமலை தான் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 22 வது நினைவு நாள் இன்று (ஜூலை 21) அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, சென்னை சத்யமூர்த்தி பவனில் உள்ள சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மணிப்பூர் கலவரம் இப்போது தான் பிரதமருக்குத் தெரிகிறதா? உளவுத்துறை என்ன செய்கிறது? நாட்டில் 100க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதை விளம்பரம் செய்வது போல, இதையும் விளம்பரம் செய்யலாம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவால் 350 இடங்களில் வெற்றி பெற முடியாது. 350 இடங்களில் வெற்றிடத்தைத்தான் காணப் போகிறார்கள்.

I.N.D.I.A  (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , அரவிந்த கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்களை பாருங்கள் , தமிழகத்தில் ஒரு கட்சியில் ஒரே தலைவராகவும், ஒரே தொண்டராகவும் இருக்கின்ற கட்சி ஜி.கே.வாசனுடைய கட்சி.

அவரை அழைத்து வைத்துக்கொண்டு தான் மோடி கூட்டணி கட்சி என்று சொல்கிறார். ஜி.கே. வாசனுக்கு அவருடைய வீட்டில் உள்ளவர்களே ஓட்டு போடுவார்களா என்பது தெரியவில்லை.

ஜி.கே.வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கின்ற காரணத்தால் அவரே கூட அவருக்கு ஓட்டு போட மாட்டார்” என்று கூறினார்.

அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள நடைபயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,” அண்ணாமலை மேற்கொள்வது நடை பயணமா இல்லை பஸ் பயணமா? நடை பயணம் போல் எனக்கு தெரியவில்லை.

நடிகர் சிவாஜி கணேசனை விட மிகப்பெரிய நடிகர் அண்ணாமலை தான். அண்ணாமலை பாதயாத்திரை போனால் நாமும் ராகுல் காந்தி ஆகி விடலாம் என்று நினைக்கிறார்.

அவர் எப்போதும் ராகுல் காந்தியாக ஆக முடியாது. அதுமட்டுமின்றி பாதயாத்திரை முடியும் வரை அவர் தமிழக பாஜக தலைவராக இருப்பாரா என்பதே சந்தேகம் தான்”என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பெங்களூரு ‘இந்தியா’ கூட்டம்: கமல் ஏன் கலந்து கொள்ளவில்லை?

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீடு: ஜூலை 26-க்கு ஒத்திவைப்பு!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0