நமது வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறிவிட்டார்கள் என்று அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து பேசினார் அண்ணாமலை.
தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம், சோழிங்கநல்லூரில் இன்று (ஜனவரி 12) நடைபெற்றது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் விபி துரைசாமி, நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன், டால்பின் ஶ்ரீதர், மாநிலச் செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, பிரமிளா சம்பத், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கராத்தே தியாகராஜன், “ அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். பெண்கள், இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டில் இரு குழப்பம் நீடிக்கிறது. அதிமுகவினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டனர்.
ட்விட்டர், முகநூல் என சோஷியல் மீடியாக்களில் சொல்லி வருகின்றனர். மதுரையிலும் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார்.
அதுபோல நாமும் சொல்ல வேண்டும். நாம் கூட்டணியில் இருக்கிறோமா என்று கேட்கிறார்கள். வாக்காளர்கள், தலைவர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. இந்த கூட்டத்தில் தலைவர் ஒரு முடிவை சொல்ல வேண்டும். எல்லோருக்கும் தெளிவுப்படுத்த வேண்டும். நமது நிர்வாகிகளிடம் நமது தலைமையில்தான் கூட்டணி என்று திறந்தவெளியில் சொல்ல வேண்டும். அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை நமது பக்கம் திருப்ப கண்டிப்பாக கூட்டணி குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து கூட்டணி குறித்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “வீடு நாம் கட்டியிருக்கிறோம். கிரஹபிரேவசத்துக்கு கூப்பிட்டோம். எல்லோரும் வந்தார்கள், சாப்பிட்டார்கள். சிலர் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள் அது இயற்கை. சிலர் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
நமது வீடு என்பது என்.டி.ஏ. நமது வீட்டில் இருந்து வெளியேறியவர்கள், அந்த வீட்டில் நான் இல்லை என்று சொன்னார்கள் என்றால் அது அவர்களுடைய கருத்து.
அதுவே, வீட்டில் இருக்கும் நாம், எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை என்று ஏன் சொல்லவேண்டும். நமக்கு அது தேவையில்லை.
வீட்டில் வந்து உணவருந்தியவர்கள் வெளியே சென்ற பிறகு, உணவு சரியில்லை. காரம் அதிகமாக போட்டுவிட்டார்கள். 9 வருடமாக அந்த காரத்தை பொறுத்துதான் சாப்பிட்டேன். இப்போது காரம் அதிகமாக தெரிந்துவிட்டது. அதனால் அந்த வீட்டில் சாப்பிடப்போவதில்லை என்று சொல்கிறார்கள்.
நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேச மாட்டோம். என்.டி.ஏ நாம் உருவாக்கிய கூட்டணி. 1998 முதல் 25 ஆண்டுகளாக இந்த கூட்டணியில் இருக்கிறோம். இதை வாரந்தோறும், மாதம்தோறும் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா.
இந்த வீட்டுக்கென்று சிலர் வருவார்கள். வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது. மோடியை ஏற்று வருபவர்கள் வருவார்கள். இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள்” என்று குறிப்பிட்டார்.
தனது பேச்சின் போது அதிமுக என்று ஒருமுறை கூட அண்ணாமலை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தில் பயணிக்க ’கட்டணம்’ அறிவிப்பு!