வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மார்ச் 19ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு வீடியோ வந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
“மார்ச் 17ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,
‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்கு எனக்கு போதிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதிமுகவோடு தான் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் நான் எனது மாநில தலைவர் பதவி ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டராக உழைப்பேன்’ என்று பேசினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சை முதன்முதலில், அன்று இரவு மின்னம்பலம் வரி வடிவத்திலும் வீடியோ வடிவத்திலும் வெளியிட்டது. இது அரசியல் அரங்கில் பலத்த அதிர்வுகளை உண்டு பண்ணியது.
அதே கூட்டத்தில் பேசிய தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ‘கூட்டணி பற்றி நாம் பேசி முடிவெடுக்க முடியாது. தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து மாநில மையக்குழு கூட்டத்தில் தான் பேச வேண்டுமே தவிர இங்கு பேச முடியாது’ என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அண்ணாமலையின் இந்த ராஜினாமா பேச்சு குறித்து மார்ச் 18 ஆம் தேதி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், வெளியில் செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன் ஆகியோரை சமூக தளங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். அண்ணாமலை தான் பாஜக என்றும் பாஜக தான் அண்ணாமலை என்றும் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து விலகினால் பாஜக பூஜ்யம் ஆகிவிடும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மார்ச் 19ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
‘மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நான் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை தெரிவித்தேன். பணம் கொடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் எந்த கட்சியோடும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது. பணம் கொடுத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமையை எதிர்கொண்டால் நான் அரசியலை விட்டே விலகி விடுவேன்.
நேர்மையான அரசியலை கொண்டு வருவதற்கு நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். மக்களும் அதற்கு தயாராக தான் இருக்கிறார்கள். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல சிறுக சிறுக மக்களின் நம்பிக்கையே பெறுவேன்’ என்று கூறிய அண்ணாமலை,
‘கூட்டணி பற்றியும் முடிவெடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது. அதை கட்சியின் அகில இந்திய நாடாளுமன்ற குழு தான் எடுக்கும். நான் இன்னும் ஆக்ரோஷமாக பேசுவேன். என் கருத்தில் தீர்க்கமாக இருப்பேன்’ என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
இது பற்றி நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள், ‘அண்ணாமலை ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் போல பேசவில்லை. அவர் ஒரு மாநில கட்சியின் தலைவருக்குரிய பிம்பங்களை பெற விரும்புகிறார்.
இதுவரை அதற்கு ஏற்பதான் அண்ணாமலை என்ற தனிப்பட்ட நபரை முன்னிறுத்தும் கட்டமைப்பு வேலைகளை அவர் செய்திருக்கிறார். கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் என்று இப்போது சொல்லும் அண்ணாமலை அதே நேரம் நான் எனது கருத்தில் தீர்க்கமாக இருக்கிறேன், மேலும் ஆக்ரோஷமாக பேசுவேன் என்றும் கூறுகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மற்ற மூத்த தலைவர்களை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் விமர்சிக்கும் விதமும் அண்ணாமலை மீதான தனி நபர் வழிபாட்டுக்கே அதிக இடம் கொடுக்கிறது. இதெல்லாம் வைத்துப் பார்த்தால் அண்ணாமலை சீனியர்களின் எதிர்ப்புக்கிடையே தேசிய கட்சியின் மாநில அரசியலை செய்வதை விடுத்து தனிக்கட்சி தொடங்கி விடுவாரோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
எடியூரப்பா கர்நாடக பாஜகவை உடைத்ததைப் போல தமிழ்நாட்டில் அண்ணாமலை ஒரு நிலைக்கு தள்ளப்படுவாரோ என்று சந்தேகமாக இருக்கிறது’ என்கிறார்கள்.
அடுத்த வாரம் டெல்லி தலைமையால் அழைக்கப்பட்டுள்ள அண்ணாமலை டெல்லி பயணத்துக்கு பிறகு தான் தனது அடுத்த கட்டத்தை பற்றி இறுதியான முடிவெடுப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
IND vs AUS 2nd ODI: இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை!
