வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பாஜக இடையேயான முட்டல் மோதல் பிரஸ்மீட் வீடியோக்கள் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் சாதி ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கு பிறகு… பாஜக மாநில ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
இதை அடிப்படையாக வைத்து எடப்பாடி தரப்பினருக்கும் பாஜகவினருக்கும் வார்த்தை போர் வலுத்துள்ளது.
‘எங்களது கட்சி நிர்வாகிகளை இழுத்துக்கொண்டு தான் அதிமுக வளர வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
நிர்மல்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைத்ததற்கு பதிலடியாக அதிமுகவிலிருந்து சிலரை பாஜகவில் இணைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பதை தான் அண்ணாமலை அப்படி சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து இரு தரப்பிலும் நாம் விசாரித்த போது, ‘நிர்மல் குமாரை அதிமுகவோ எடப்பாடி பழனிசாமியோ வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. அவர் விரும்பியதால் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதை கூட்டணி தர்மம் இல்லை என்று அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் 2021லயே அதிமுகவின் வழிகாட்டும் குழு உறுப்பினராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சோழவந்தான் மாணிக்கத்தை நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர்த்தார்கள். அதிமுகவில் இளம் பெண்கள் பாசறை நிர்வாகியாக இருந்த அரவக்குறிச்சி செந்தில்நாதனை பாஜகவில் சேர்த்தார்கள். அதிமுகவின் மாநில மீனவர் அணி தலைவராக இருந்த நீலாங்கரை முனுசாமியை அமமுகவில் சேர்ந்த அடுத்த நாளே பாஜகவில் சேர்த்தார்கள்.
இதெல்லாம் போதாது என்று சில மாதங்கள் முன்பு வரைக்கும் கூட அதிமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் மகன் கதிர் ஈஸ்வரனை பாஜகவுக்கு வருமாறு அண்ணாமலையே நேரடியாக பேசி உள்ளார்.
இனி அதிமுகவில் ஒன்றும் இல்லை பாஜகவுக்கு வாருங்கள் என்று அதிமுகவில் இருக்கும் பல்வேறு இளம் பிரமுகர்களையும் அண்ணாமலையே தொடர்பு கொண்டு பாஜகவில் இணைப்பதற்கான வேலையை நடத்தி வருகிறார். இந்த தகவல்கள் எல்லாம் எடப்பாடிக்கு அவ்வப்போது சென்று கொண்டு தான் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில்தான் தானாகவே விருப்பப்பட்டு வந்த நிர்மல் குமாரை எடப்பாடி பழனிசாமி சேர்த்துக்கொண்டார். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று அண்ணாமலை சொல்கிறார். ஆனால் இதெல்லாம் அண்ணாமலையின் வினைக்கான எதிர்வினை தான். பாஜகவில் இருந்து இன்னும் பலர் அதிமுகவுக்கு வருவார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தல் தான் முக்கியம். இனியும் பாஜகவோடு இருந்தால் தொடர் தோல்வி தான் என்று அவர் முடிவு செய்துதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திலேயே பாஜகவை சற்று தள்ளி வைத்தார்.
பாஜகவில் இருந்து விலகுவதன் மூலம் தன் மேல் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சட்ட நடவடிக்கை பாய்ந்தாலும் அதை தனது அரசியல் ஆதாயமாக பயன்படுத்த முடிவு செய்துவிட்டார் எடப்பாடி. எனவே பாஜக அதிமுக மோதல்களை அடுத்தடுத்து அதிகமாக்கும் சம்பவங்கள் நடைபெற கூடும் என்கிறார்கள்’ என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
உலக மகளிர் தினம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்!