கோவை கார் வெடிப்பு தொடர்பாக காவல்துறை மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதி்ல் அளிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக நேற்று (அக்டோபர் 29 ) அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்ணாமலை இன்று (அக்டோபர் 30 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 23 ஆம் தேதி இரவு, நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை,
இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?
அக்டோபர் 21 ஆம் தேதி ஜமேஷா முபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம்-இதை காவல்துறை மறுக்க முடியுமா? இறந்த ஜமேஷா முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம்,
காவல் துறை இதை மறுக்குமா? கைது செய்யப்பட்ட 3 பேர் மீது UAPA சட்டம் பாயாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

21 ஆம் தேதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?,
அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் – காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு (காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது)
96 நபர்களுக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு.
அதில் ஜமேஷா முபீன் 89 ஆம் இடத்தில் உள்ளார். இந்த வருடம் ஜூலை மாதம் 10ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபீனை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 165 தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.
அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார். இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பியது எப்படி” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்