திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்ட அண்ணாமலை

Published On:

| By Kavi

திமுக அரசுக்கு எதிராக அறிவித்த போராட்டத்தை  கைவிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.

இந்த திட்ட பணிகள் முடிவடைந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தத் திட்டத்துக்காக நிலம் கொடுத்தவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என அரசியல் கட்சிகள் திமுக அரசு மீது குற்றம்சாட்டி வந்தன.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்காததைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, ஆகஸ்ட் 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்தசூழலில் இத்திட்டத்தை நாளை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை. அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல் பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது. திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும். எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

மேலும், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு இதுவரை தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தற்போது, ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மனோரதங்கள் டூ தெ ரெக்வின் வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ!

ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ கலைச்செல்வி மீது தாக்குதல்… நேபாள பெண் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share